பறிமுதல் செய்த சாராயத்தை வியாபாரியிடமே விற்ற ஏட்டு

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள், கொள்ளை வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகின்றன. தொடர் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ள நிலையில் திருப்பத்தூர் டிஎஸ்பி தலைமையில் குற்றவாளிகளை பிடிக்க குற்றப்பிரிவு போலீசார் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் ரோந்து பணி மேற்கொள்கின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்ட இரவு நேர ரோந்து பணியின் போது, திருப்பத்தூர் அடுத்த கந்திலி அருகே ஜல்லியூரில் போலீசாரை பார்த்து பயந்த ஆசாமி ஒருவர் 200 லிட்டர் சாராயத்தையும், பைக்கையும் அங்கேயே விட்டுவிட்டு விவசாய நிலம் வழியாக தப்பி ஓடிவிட்டார்.

அந்த சாராயத்தை கைப்பற்றிய குற்றப்பிரிவு ஏட்டு, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் அதை ஒப்படைக்காமல், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு சாராய வியாபாரியை அழைத்து அவரிடம் கொடுத்துவிட்டு அதற்கேற்ற பணத்தை பெற்றுக் கொண்டாராம். மேலும், இரு சக்கர வாகனத்தையும் உயரதிகாரிகளுக்கு தெரிவிக்காமல், வேறு ஒரு சாராய வியாபாரிக்கு விற்பனை செய்து விட்டாராம். இந்த விஷயம் இன்ஸ்பெக்டர் முதல் எஸ்பி தனிப்பிரிவு ஏட்டு வரை தெரிந்து அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட குற்றப்பிரிவு ஏட்டை டோஸ் விட்டு, பைக்கை மட்டும் கைப்பற்றி காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இவ்வாறு வேலியே பயிரை மேய்ந்த சம்பவம் திருப்பத்தூர் காவல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்பிக்கு எக்குதப்பாக போன் எஸ்.எஸ்.ஐ., டீலிங்குக்கு ஆப்பு  

முட்டைக்கு பேமசான ஊரில் எஸ்பிக்கு எக்குத்தப்பாக போன் செய்து, சிக்கிக் கொண்டதால் டீல் பேச முடியாமல் போன எஸ்எஸ்ஐ தான், நடப்புவாரத்திற்கான ஹாட் டாபிக். டவுன் ஸ்டேஷனில் எஸ்எஸ்ஐயாக பணியாற்றும் அறுபடை வீட்டின் ஒரு பெயரை வைத்திருக்கும் சாமியானவர் வகுரம்பட்டியில் வசிக்கிறாராம். இவரது  வீட்டுக்கு அருகில் நடக்கும் ஒரு கட்டுமான பணிக்கு ஒரு லோடு மணல் லாரியில வந்திருக்கு. இதை மோப்பம் பிடித்த  எஸ்.எஸ்.ஐ., அங்கு சென்று மணல் ஏற்றி வர பர்மிட் இருக்கா? என்று விசாரித்து லாரி டிரைவரிடம் டீல் பேசியிருக்காரு. பர்மிட் இல்லை என்று டிரைவர் கூறியதால், உற்சாகமானவர், ₹20 ஆயிரம் கொடுத்தால் தான்,  லாரியை விடுவேன் என்று டீலை ஆரம்பித்துள்ளார். இதற்கு டிரைவர் மறுத்து 10 ஆயிரம் தருவதாக கூறியுள்ளார். இதை வாங்க மறுத்த எஸ்எஸ்ஐ இப்போதே எஸ்பிக்கு போன் போட்டு கேஸ் போடுறேன் என்று உதார் விட்டுக்கொண்டே எஸ்பியின் நம்பரை, செல்போனில் டிரைவருக்கு காட்டினாராம். அப்போது டச் போனில் இருந்து எதிர்பாராதவிதமாக எஸ்பிக்கு லைன் போய்விட்டது. பதறிப்போன எஸ்எஸ்ஐ போன் இணைப்பை துண்டித்துவிட்டு மறுபடியும் டீலை ஆரம்பித்தாராம். அப்போது  திடீரென எஸ்எஸ்ஐயின் லைனுக்கு வந்த எஸ்பி, எதுக்கு கூப்பிட்டீங்க? என்று  கேட்டாராம். இதை சமாளிக்க வேறு வழிதெரியாமல் உண்மையை சொல்லிட்டாராம் எஸ்எஸ்ஐ. ‘விடாதீங்க கேஸ் போட்டு டிரைவரை ரிமாண்ட் பண்ணுங்க’ என கூறிவிட்டு எஸ்பி இணைப்பை கட் பண்ணிட்டாராம். இதனால் அரண்டு போய், அசடு வழிந்த எஸ்எஸ்ஐ, வேறு வழியே இல்லாமல் கடமை வீரராக மாறி, டிரைவர் மேல் கேஸ் பதிவு செய்தாராம்.

லஞ்ச ஒழிப்பில் ‘லஞ்ச’ போலீஸ்

தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்திற்கு வரும் புகார்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கசிந்து விடுகிறதாம். அண்மையில் கல்வித்துறை அலுவலகத்தில் லஞ்சம் வாங்க தயாராக இருந்த அதிகாரியை பிடிக்க தயாரான செய்தியும், அந்த அதிகாரிக்கு தெரிந்து விட்டதாம். சுதாரித்துக் கொண்ட அவர் ஒரு நொடியில் தப்பி விட்டாராம். இப்படி தங்கள் அலுவலகத்தில் இருந்து கொண்டே தங்களுக்கு வரும் தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தெரிவிக்கும் அந்த ’கருப்பு ஆடு’ யார் என லஞ்ச ஒழிப்பு போலீசார் மண்டை காய்ந்து வருகின்றனராம். தகவல் தரும் போலீஸ் லஞ்ச மழையில் நனைகிறாராம். இதனால் அத்தனை பேரின் மொபைல் பேச்சுகளும் ஆய்வு செய்யப்படுகிறதாம். ஆனாலும், அந்த ‘லஞ்ச’ போலீஸ் இதற்காக தனி சிம்முடன் கூடிய செல்போனை வைத்துள்ளாராம். எப்படியோ அரசுத்துறைகளில் லஞ்சத்தை தடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவிலேயே, ஒரு லஞ்ச போலீஸ் புகுந்து விளையாடுவது எல்லோரையும் குழப்பி வருகிறதாம். அவரை எப்படியும் பிடித்தாக வேண்டுமென உயரதிகாரிகள் ‘லஞ்ச போலீசுக்கு’ வலை விரித்துள்ளனராம்.

பெரிய அதிகாரியே இப்படியா?

குமரி மாவட்டத்தில், திருட்டு மது விற்பனை கொடி கட்டி பறக்கிறது. எஸ்.பி. என்னதான், மைக்கில் மூச்சிறைக்க பேசி நடவடிக்கை எடுங்கள் என்று கூறினாலும் சில காவல் நிலைய பகுதியில் திருட்டு மது விற்பனை குறைந்த பாடில்லை. இதற்கு யார் காரணகர்த்தாவாக இருக்கிறாரோ? அந்த அதிகாரியே எஸ்.பி.யுடன் நெருக்கமாக இருக்கிறாராம். உயர்ந்த போஸ்டிங் என்பதால், தானே நேரடியாக வசூலில் இறங்கி லட்சங்களை வாரி சுருட்டி கொள்கிறாராம். பெரிய அதிகாரியே இப்படி இருப்பதால், திருட்டு மது விற்பனையை இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்களும் பெரியளவில் கண்டு கொள்வதில்லை. பெயருக்கு 25 பாட்டில், 30 பாட்டில்கள் என்று வழக்கம் போல் சிலரை பிடித்து வந்து கணக்கு காட்டி, தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் வசூலில் தூள் கிளப்புகிறார்களாம். அதுவும் பிராந்தி கடை மூடல் அன்று கேட்கவே வேண்டாம். மற்ற நாட்களை விட அன்றைய தினம் மட்டும் மாமூல் இரட்டிப்பாக கிடைக்கிறதாம். சமீபத்தில், அக்.2, காந்தி ஜெயந்தி அன்று மதுக்கடைகள் மூடியதால், மாவட்டத்தில் சில இடங்களில் வரிசையில் நின்று வாங்கும் அளவுக்கு, திருட்டுத்தனமாக மது விற்பனை நடந்து இருக்கிறது. பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் சென்ற பின்னரும், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் இருந்து பெயரளவுக்கு கூட அந்த பகுதிக்கு சென்று கண்காணிக்க வில்லையாம். அந்தளவுக்கு சில முக்கிய பகுதிகளில் உள்ள திருட்டு மது வியாபாரிகள், போலீசாரை குளிர்விக்கிறார்களாம். இப்படி திருட்டு மது விற்பனை கொடி கட்டி பறக்கும் நிலையில் மதுவிலக்கு சோதனை சாவடியை சமீபத்தில் எஸ்.பி. திறந்து வைத்தார். இருக்கிற சோதனை சாவடிகளே சரியாக செயல்பட வில்லை. உள்ளூரில் திருட்டு மது ஆறாக ஓடும் நிலையில், மதுவிலக்கு சோதனை சாவடியை மாவட்ட எல்லையில் தொடங்கி என்ன பயன் என்று போலீசாரே குமுறல்களை வெளிப்படுத்தி உள்ளார்களாம்.

சிபிஐ வளையத்தில் போலீஸ் அதிகாரிகள்

புதுச்சேரி சிபிசிஐடி எஸ்பியாக இருந்தவரு செல்வமானவர், பெரியக்கடை காவல்நிலைய அதிகாரியாக இருந்தபோது, குறிப்பிட்ட 3 வழக்குகளில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் இந்த வழக்கை தவறாக பதிவு செய்துவிட்டதாக காவல்துறையே ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். இதற்கு 0141 என்ற எண்ணில் இரண்டு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாக போலீசாரே காரணத்தை கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள பொதுநல அமைப்புகள் சிபிஐக்கு ஆதாரத்துடன் புகார் தெரிவித்துள்ளது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று காவல்துறை உயரதிகாரிகளே எப்ஐஆர் ரத்து விவாகாரத்தில் உடந்தையாக இருப்பது தெரியவந்துள்ளது. இதில் விரைவில் சிபிஐ வழக்கு பதிவு செய்து நேரடியாக விசாரணையில் குதிக்கப்போவதால் போலீசார் பீதியில் உள்ளனர்.

Related Stories: