நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் வேட்பாளர்கள் தேர்வில் அரசியல் கட்சிகள் தீவிரம்: வேட்புமனு தாக்கல் நாளை துவக்கம்

சென்னை: தமிழகத்தில் காலியாக  உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுவையில் உள்ள காமராஜ் நகர்  தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. கட்சிகள் தீவிரமாக  ஆலோசிக்க துவங்கி விட்டன.நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக  இருந்த வசந்தகுமார், கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது  கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து  கடந்த மே 27ம் தேதி  தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால்  நாங்குநேரி தொகுதி காலியிடமாக அறிவிக்கப்பட்டது.அதேபோன்று, விழுப்புரம்  மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராதாமணி உடல்  நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மரணம் அடைந்தார். இதனால்  இந்த தொகுதியும் காலியாக அறிவிக்கப்பட்டது.இந்த 2 தொகுதிகளுக்கும்  கடந்த ஆகஸ்டு 5ம் தேதி நடைபெற்ற வேலூர் மக்களவை தொகுதி தேர்தலுடன் சேர்த்து  இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வேலூருக்கு  மட்டும் தேர்தல் ஆணையம் தேர்தலை  அறிவித்தது. தமிழகத்தில் காலியாக இருந்த 2  சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில்  மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலத்துக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை  இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று மதியம் அறிவித்தார்.  அப்போது, தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி,  விக்கிரவாண்டி ஆகிய இரண்டு  சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் காலியாக  உள்ள காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிக்கும் அக்டோபர் 21ம் தேதி நடைபெறும்  என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியதாவது:தமிழகத்தில்  காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகள்  மற்றும் புதுச்சேரி மாநிலம் காமராஜ்நகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட  விரும்புகிறவர்கள் வருகிற 23ம் தேதி முதல் வேட்புமனு  தாக்கல் செய்யலாம்.  செப்டம்பர் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளாகும். அக்டோபர்  1ம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். அக்டோபர் 3ம் தேதி வரை  வேட்புமனுக்களை வாபஸ் வாங்கலாம். அக்டோபர் 21ம்  தேதி வாக்குப்பதிவு  நடைபெறும். அக்டோபர் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள்  அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல்  18ம் தேதி, 38 மக்களவை தொகுதிக்கான பொதுத்தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற  தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. பின்னர் மே 19ம் தேதி  திருப்பங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி  உள்ளிட்ட 4  சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பணம்  பட்டுவாடா தொடர்பாக நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கு  மட்டும் கடந்த ஆகஸ்டு 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த  நிலையில், இரண்டு  மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற  தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும்  என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாங்குநேரி  தொகுதியில் வசந்த்குமார், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு  வெற்றிபெற்றதால், அந்த தொகுதியை மீண்டும்  காங்கிரஸ் கட்சிக்கே திமுக  விட்டுக்கொடுத்துள்ளது. அதேநேரம் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு  தொகுதிகளிலும் அதிமுக கட்சியே போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. டிடிவி  தினகரன் போட்டியிடவில்லை என்று அறிவித்து  விட்டார். நடிகர் கமல், சீமான்  ஆகியோர் இன்னும் தங்களது முடிவுகளை அறிவிக்கவில்லை. இதனால் தேர்தல்  அறிவிப்பு வெளியானவுடன் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்

தமிழகத்தில்  காலியாக உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்   அறிவிக்கப்பட்டுள்ளதால், திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில்   தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று மதியம் முதல் அமலுக்கு  வந்துள்ளது. அரசு   அதிகாரிகள் யாரும் அங்கு இடமாற்றம் செய்யக்கூடாது. புதிய திட்டங்கள்   எதுவும் நடைமுறைப்படுத்த முடியாது. முதல்வர், அமைச்சர்கள் யாரும் அரசு   வாகனங்களில் அந்த மாவட்டத்துக்குள் செல்ல அனுமதி இல்லை.  பறக்கும் படையினர்   இன்று முதல் வாகன சோதனையில் ஈடுபட தொடங்குவார்கள். வாகனங்களில் ரூ.50   ஆயிரத்துக்கு மேல் அனுமதி இல்லாமல் எடுத்துச் சென்றால் பறிமுதல்   செய்யப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  கூறினார். இதுபோன்ற  நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தில் அரசியல் களம்  மீண்டும் சூடுபிடிக்க  தொடங்கும்.

Related Stories: