பங்குச்சந்தையில் 2 நாளில் 2.72 லட்சம் கோடி அவுட்

மும்பை: இந்திய பங்குச்சந்தையில் 2 நாட்களில் மட்டும் முதலீட்டாளர்கள் 2.72 லட்சம் கோடி இழந்துள்ளனர். இந்திய பங்குச்சந்தையில் தொடர்ந்து ஸ்திரமற்ற சூழ்நிலை காணப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். பொருளாதார மந்த நிலை, தொழில்துறை வளர்ச்சி தேக்கம் என அடுத்தடுத்து பின்னடைவு ஏற்பட்டு  வருகிறது. அதோடு,  நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரிசர்வ் வங்கி கணித்த 5.8 சதவீதத்ைத விட சரிந்து 5 சதவீதமாக உள்ளது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் அறிவித்தார்.  இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத மந்த நிலையாக காணப்படுகிறது. அதோடு சவூதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென 19 சதவீதத்துக்கு  மேல் அதிகரித்தது. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவுவதால் சர்வதேச பங்குச்சந்தைகளும் சரிந்தன.

 மேற்கண்ட காரணங்களின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளிலும் சரிவு காணப்பட்டது. நேற்று முன்தினம் மும்பை பங்குச்சந்தை 262 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை 72 புள்ளிகளும் சரிந்தன. நேற்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு  எண் சென்செக்ஸ் 642.22 புள்ளிகள் சரிந்து 36,481.09 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 185.90 புள்ளிகள் சரிந்து 10,817.60 புள்ளிகளாக இருந்தது. ஆட்டோமொபைல், ஸ்டீல், வங்கி, ரியல் எஸ்டேட், தகவல்  தொழில்நுட்பம், எண்ணெய் நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. தொடர்ந்து 2 நாட்களில் மட்டும் 2.72 லட்சம் கோடிக்கு மேல் இழந்தனர். மும்பை பங்குச்சந்தையில் பங்குகளின் மதிப்பு 2,72,593.54 கோடி சரிந்து 1,39,70,356.22 கோடி ஆனது.

Related Stories: