அமலாக்கத்துறையினரிடம் அளித்த வாக்குமூல அறிக்கையின் நகலை வழங்க வேண்டும் : சிவகுமார் மனு

புதுடெல்லி: சட்ட விரோத பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கர்நாடக  முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார், அமலாக்கத்துறையினரிடம் அளித்த வாக்குமூல  அறிக்கையின் நகலைக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்துள்ளார். கர்நாடகாவின் கனகபுரா தொகுதி எம்எல்ஏவும் முன்னாள்  அமைச்சருமான டி.கே.சிவக்குமார் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, வரி  ஏய்ப்பு தொடர்பாக வருமானவரித் துறை கடந்தாண்டு வழக்குப்பதிவு செய்து,  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதையடுத்து அமலாக்கத்துறை அவரிடம் கடந்த  30, 31 மற்றும் செப்டம்பர் 3 ஆகிய தேதிகளில் பலமணி நேரம் கிடுக்கிப்பிடி  விசாரணை நடத்தியது. அப்போது அவரின் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில்,  சிவகுமார் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தார்.  அந்த மனுவில், `பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் தன் மீது வழக்குப்பதிவு  செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை. எனது வாக்குமூல அறிக்கையின் நகலை  அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. கடந்த  2017ம் ஆண்டில் சிவகுமாரின் டெல்லி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 8  கோடியே 59 லட்சம் ரூபாய் தொடர்பாக அமலாக்கத்துறையினர் கடந்த 3ந் தேதி அவரை  கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்துவதற்காக முதலில் 9 நாட்களும்,  பின்னர் 4 நாட்களும் காவலை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம்  உத்தரவிட்டது. இதற்கிடையே, காவல் முடிந்த நிலையில் நேற்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு 14 நாள் நீதிமன்ற  காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories: