இந்தியாவில் பல கட்சி நாடாளுமன்ற ஆட்சி முறை தோல்வி அடைந்து விட்டது: அமித்ஷாவின் கருத்தால் சர்ச்சை

புதுடெல்லி: இந்தியாவில் பல கட்சி நாடாளுமன்ற ஆட்சி முறை தோல்வி அடைத்து விட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். பலகட்சி நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறை தோற்றுவிட்டது என்பதில் மக்களுக்கு சந்தேகம் இல்லை என கூறியுள்ளார். 70 ஆண்டு சுதந்திர இந்தியாவில் பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறை நடைமுறையில் உள்ளது என தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் எல்லைகள் பாதுகாப்பற்று இருந்தன என்றும் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் கடும் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி:

உள்துறை அமைச்சர் அமித்ஷா-வின் கருத்தை மிக மிக வன்மையாக கண்டிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல்; ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை; ஒரே நாடு, ஒரே மொழி இப்பொழுது பூனைக்குட்டி முற்றிலுமாக வெளிவந்து விட்டது என்பது போல் ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்ற நிலைக்கு அமித்ஷா வந்துவிட்டதாக விமர்சித்தார். மேலும் அதற்கு அவர் கூறும் காரணங்கள் மிகவும் தவறானது என கூறினார். 1977ல் அமைந்த விபி சிங்-ன் கூட்டணி ஆட்சி நிலைத்து நிற்கவில்லை என்று சொன்னாலும் அதுதான் மண்டல் கமிஷனை அமைத்தது. மண்டல் கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்த நடவடிக்கை எடுத்தது, அதன்காரணமாக பாஜகவால் அந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டது. மன்மோகன் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான் மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டம், விவசாய தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை சட்டமாக்கப்பட்டது. தகவல் உரிமை பெரும் சட்டம் கொண்டுவரப்பட்டது. எனவே, கூட்டணி ஆட்சியில் தான் பல நல்ல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனை மூடி மறைத்துவிட்டு ஆர்.எஸ்.எஸ்-ன் சொந்த கொள்கையை பாஜக அமல்படுத்த பார்க்கிறது என விமர்சித்தார்.

காங்கிரஸ் கட்சி:

இந்தியாவில் பல கட்சி ஜனநாயக ஆட்சி தோல்வி என்ற அமித்ஷாவின் கருத்துக்கு காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கோபண்ணா கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் போது, இந்த நாட்டுக்கு அதிபர் ஆட்சி தேவையா? பாராளுமன்ற ஜனநாயகம் தேவையா? என்று மிகப்பெரிய சர்ச்சை எழுந்தது. அன்று நாட்டுமக்களின் அமோக ஆதரவு பெற்ற மிகப்பெரிய தலைவராக ஜவஹர்லால் நேரு விளங்கினார். அவர் விரும்பியிருந்தால் நாட்டில் அதிபர் ஆட்சியை அமல்படுத்தியிருப்பார். ஆனால், அவர் அதனை விரும்பவில்லை. இந்தியாவின் பன்முகத்தன்மை கலாச்சார வேற்றுமைகளை பாதுகாப்பதற்காவே பாராளுமன்ற ஜனநாயகம் கொண்டுவரப்பட்டது. ஆனால் நரேந்திர மோடி பிஜேபி கட்சிக்கு வந்த பிறகு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என ஒற்றை ஆட்சி முறையை கையாண்டு வருகின்றனர். மேலும் ஜனநாயகத்தின் மூலம் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடியை, நாட்டின் அதிபராக மாற்றுவதற்கான முயற்சியில் அமித்ஷா ஈடுபட்டு வருகிறார் என கண்டனம் தெரிவித்தார். பாஜக கட்சிக்கு உள்ள பெரும்பான்மையை வைத்துக்கொண்டு மக்களை மதரீதியாக பிளவுபடுத்துவது தற்போது உள்ள ஆட்சி முறைக்கு விடப்பட்ட சாவல் என தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி:

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு அரசியல் சட்டத்துக்கு எதிரானது என மார்க்சிஸ்ட் கே.பாலகிருஷ்ணன் கூறினார். அமித்ஷாவின் கருத்து சர்வாதிகார மனோபாவம் கொண்டது என்று பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரே கட்சி ஆட்சி இந்தியாவுக்கு சாத்தியமானதல்ல, இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி:

அமித்ஷா-வின் கருத்தில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். பாஜக எல்லாவற்றையும் ஒருமை தன்மையை நோக்கி நகர்த்த முயற்சித்து கொண்டிருப்பதாக கூறினார். ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே ஆட்சி என்ற வழியில் இந்த நாட்டை வழிநடத்துகிறது. இது மிகவும் ஆபத்தானது. ஜனநாயகத்தின் முக்கியமான கூறுகளில் பன்மைத்துவம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அத்தகைய பன்மைத்துவதை சிதைக்கும் முயற்சியில் தொடர்ந்து பாஜக ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார். அரிதி பெரும்பான்மை பலத்தை வைத்துக்கொண்டு எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற நிலைப்பாடுகளை அமித்ஷா எடுத்து வருவதாக திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக:

இது தொடர்பாக திமுக எம்.பி திருச்சி சிவா கூறுகையில், அமித்ஷா கூறியிருப்பது மிகவும் தவறான கருத்து என்பதை விட மிகவும் ஆபத்தான கருத்தை முன்வைத்துள்ளார் என கூறினார். சமீபகாலமாக பாஜக பாராளுமன்ற ஜனநாயக முறையில் விவாதங்கள் நடத்துவதில்லை. குழுக்களில் விவாதிப்பதில்லை. முறையாக எதையும் அனுமதிக்கவில்லை. பிரதமர் அவைக்கு சரியாக வருவதில்லை போன்ற பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார். தற்போது பாஜக அரசு இந்திய நாட்டின் அரசியல் முறையை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பதை தெளிவுபடுத்தும் விதமாக ஒவ்வொன்றாக அவர்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர் என தெரிவித்தார். மேலும் இது அவர்களை வெற்றி பாதையில் வழிநடத்தாது என கூறியுள்ளார்.

மே 17 இயக்கம்:

பல கட்சி ஆட்சி முறைதான் இந்திய ஜனநாயகத்தின் முழுகெலும்பாக உள்ளது என்று திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். அமித்ஷாவின் கருத்து ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பல கட்சிகளின் கூட்டணியோடுதான் பாஜக. தற்போது மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ளது என கருத்து தெரிவித்தார்.

Related Stories: