கோவையில் சிறுவன், சிறுமி கொலை வழக்கு : குற்றவாளி மனோகரனை அக்.16ம் தேதி வரை தூக்கிலிட உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

புதுடெல்லி: கோவையில் 2 பள்ளிக் குழந்தைகள் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி மனோகரன் மீதான தூக்குத் தண்டனையை  அக்.16ம் தேதி வரை நிறைவேற்ற உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. முன்னதாக மனோகரனுக்கு தூக்கு தண்டனையை வரும் 20-ம் தேதி நிறைவேற்ற திட்டமிடப்பட்டு இருந்தது.

வழக்கின் பின்னணி

கோவை ரங்கே கவுடர் வீதி, காத்தான் செட்டி சந்து பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் ஜெயின். ஜவுளிக்கடை அதிபர். இவரது மனைவி சங்கீதா. இந்த தம்பதிக்கு 11 வயது மகளும், 8 வயது மகனும் இருந்தனர்.இவர்கள் 2 பேரும் காந்திபுரத்தில் உள்ள பள்ளியில் 5 மற்றும் 3-ம் வகுப்பு படித்து வந்தனர். அவர்கள் தினமும் பள்ளிக்கு கால்டாக்சியில் செல்வது வழக்கம். கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி அவர்கள் பள்ளிக்கு சென்ற போது கடத்தி செல்லப்பட்டனர்.பின்னர் அவர்கள் பொள்ளாச்சி அருகே உள்ள பிஏபி வாய்க்காலில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இரு குழந்தைகள் கொலை தொடர்பாக கால்டாக்சி டிரைவர் மோகன்ராஜ் மற்றும் அவனது கூட்டாளி மனோகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மோகன்ராஜை போலீசார் பொள்ளாச்சிக்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது வழக்கு விசாரணையின்போது போலீசிடம் இருந்து தப்ப முயன்ற மோகன் ராஜை வெள்ளலூரில் வைத்து போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். மனோகரன் கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தான். இந்த வழக்கு கோவை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

மனோகரனுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பில் மனோகரனுக்கு இரட்டை தூக்கு தண்டனையும், 3 ஆயுள் தண்டனையும் விதித்து மகிளா கோர்ட்டு நீதிபதி தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து மனோகரன் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சென்னை ஐகோர்ட்டும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.இதையடுத்து மனோகரன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அவ்வழக்கை விசாரித்த நீதிபதி, மனோகரனுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு அளித்தார்.

தூக்கிலிட உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

இந்நிலையில் மரணதண்டனையை ரத்து செய்யக்கோரி மனோகரன் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு இன்று நீதிபதி ரோகிண்டன் நாரிமன் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளி மனோகரன் மீதான தூக்குத் தண்டனையை  அக்.16ம் தேதி வரை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. மேலும் வழக்கின் விசாரணையையும் அன்றைக்கே நீதிமன்றம் ஒத்திவைத்தது. முன்னதாக செப்டம்பர் 20-ம் தேதி மனோகரனுக்கு மரண தண்டனை நிறைவேற்ற திட்டமிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: