கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 12 பேரின் சடலங்கள் மீட்பு: பலி எண்ணிககை 24 ஆக உயர்வு

கோதாவரி: ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் ஏற்கனவே 12 பேர் பலியான நிலையில், மேலும் 12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள கண்டிபோச்சம் கோவிலுக்கு சென்ற சுற்றுலாப்பயணிகள், பாப்பிகொண்டலு என்ற சுற்றுலாத்தலத்திற்கு செல்வதற்காக கோதாவரி ஆற்றில் படகில் பயணித்துள்ளனர். ராயல் வசிஸ்டா என்ற சுற்றுலாப் படகில் ஓட்டுநர், ஊழியர்கள் மற்றும் பயணிகள் என 60க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில், தேவிப்பட்டிணம் அடுத்த கச்சனூர் என்ற இடத்தில் அந்த படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆற்றில் அதிகளவில் தண்ணீர் சென்றதாலும், திடீரென ஏற்பட்ட நீரின் சுழற்சியாலும் கட்டுப்பாட்டை இழந்த படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் 24 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 12 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். மேலும் மாயமான 30 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் காணாமல் போன 12 பேரின் சடலங்களை மீட்புப் படையினர் கண்டெடுத்துள்ளனர். கோதாவரி ஆற்றில் தௌவ்லேஸ்வரம் தடுப்பணை பகுதியில் 2 பேரின் உடல்களை மீட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனால் பலி எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் நேற்று விபத்து நடைபெற்ற கோதாவரி ஆற்றுப்பகுதியை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார்.

Related Stories: