தன்னை அமமுகவில் இருந்து நீக்கிவிட்டதாக டிடிவி தினகரன் தெரிவிக்கவில்லை: கோவையில் புகழேந்தி பேட்டி

கோவை: அமமுக- வில் இருந்து தன்னை நீக்கிவிட்டதாக கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறவில்லை என புகழேந்தி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, அமமுக கட்சி செய்தித்தொடர்பாளர் பெயர் பட்டியலில் தனது பெயர் இடம்பெறவில்லை என தெரிவித்தார். அதே சமயம், கட்சியில் இருந்து தன்னை நீக்கியாக டி.டி.வி தினகரனும் கூறவில்லை எனக் கூறினார். கடந்த சில மாதங்களாகவே அமமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், அமமுக கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த புகழேந்தி-க்கும் பொது செயலாளர் டிடிவி தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. மேலும், அ.ம.மு.க எனக்குச் சொந்தமான கட்சி, அதை தொடங்கியதில் என்னுடைய பங்கும் இருக்கிறது.

அதனால் யாரும் என் மீது நடவடிக்கை எடுக்க முடியாது, நீக்கவும் முடியாது என புகழேந்தி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நேற்று அமமுக கட்சிக்கான செய்தித் தொடர்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அதில், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ ரெங்கசாமி, முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல்,மற்றும் சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட 14 பேர் கொண்ட பெயர் பட்டியல் இடம்பெற்றுள்ளது. ஆனால் செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த புகழேந்தியின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அமமுகவில் இருந்து அவர் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கருதப்பட்டது. இது தொடர்பாக பேசிய அவர், தாம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக ஏதும் தகவல் வரவில்லை என விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் கோவை அமமுக நிர்வாகிகள் சிலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது. நிர்வாகிகள் நீக்கப்பட்டதில் அநீதி நடந்துள்ளது என தெரிவித்தார். மாவட்ட செயலாளர் புகாரால் தான் அமமுக நிர்வாகிகள் நீக்கப்பட்டதாக தெரிவித்தார். கோவையில் அரசுக்கு எதிராக பல்வேறு கட்டங்களில் போராட்டம் நடத்திய தொண்டர்கள் 21 நாட்கள் சிறையில் இருந்தனர். ஒரு தவறான முடிவை அமமுக நிர்வாகம் எடுத்ததால் பாதிக்கபட்டவர்கள் சார்பாக தாம் குரல் கொடுத்ததாக தெரிவித்தார். அதற்காக தமக்கு என்ன தண்டனை வழங்கினாலும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். மேலும் தமக்கு தொண்டர்கள் தான் முக்கியம் என கூறினார்.

Related Stories: