செடி வளர்த்தா கொசு வராது!

செடிகள் இருந்தால்தான் கொசு வரும் என்பார்கள். சில செடிகளை வளர்த்தால் கொசுக்களை துரத்தவும் முடியும். பொதுவாக நம் வீட்டுத் தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் செடிகளில் சில பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்களையும் விரட்ட உதவுபவையாக இருந்தால் இரட்டை சந்தோஷம்தானே? கொசுக்களை விரட்டி நம் இரவுத் தூக்கத்தை இனிமையாக்கும் சில செடிகள் இங்கே…

ஏஜ்ரேடம் (Ageratum)

வெள்ளை நிறமும் ரோஜா நிறமும் கலந்து கவர்ச்சியாக காட்சி தரும் இந்த பூச்செடி உண்மையில் காக்கா வலிப்புக்கும், காயங்களுக்கும் அருமருந்து. வாசனை திரவியங்கள் தயாரிப்பவர்கள், கொசு விரட்டிகளை உற்பத்தி செய்பவர்கள் அதற்காக இதன் எசென்ஸை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இது அரிக்கும் தன்மை கொண்டது. இதனால்தான் சில வகையான கொசுவத்திகள் எரியும்போது சிலருக்கு தோலில் அரிப்பும் அலர்ஜியும் ஏற்படுகிறது.

யூகிலிப்டஸ் (Eucalyptus)

தமிழகத்தில், நீலகிரி மாவட்டத்தில் பரவலாகக் காணப்படும் மூலிகை. படுவேகமாக வளரக்கூடியது. ஆனால் இதை வீட்டில் வளர்ப்பது சாத்தியமில்லை. அதே சமயம் இதன் இலைகளை எளிதாக சேகரிக்கலாம். அவற்றைக் காய வைத்து தீ மூட்டினால் அந்த வாசனை பிடிக்காமல் கொசுக்கள் பறந்துவிடும்.

சிட்ரோநெல்லா (Citronella  Lemongrass)

சிட்ரோநெல்லா எண்ணெய் மிகப் பிரபலமான ஓர் இயற்கை பூச்சி விரட்டி. இதன் சிறப்பு பல ஆய்வுகளின் மூலமாக தெரிய வந்திருக்கிறது. வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சிட்ரோநெல்லாவைப் பயன்படுத்தி, சென்ட்டு தயாரிக்கின்றன.

மாரிகோல்ட் (Marigold)

மஞ்சள் வண்ண பூக்களைக் கொண்ட செடி வகை. இதை கிராமப்புறங்களில் ‘துலுக்கச் சாமந்தி’ என்று குறிப்பிடுவார்கள். சிராய்ப்பு, காயங்கள், தோல் வியாதிகள், தீக்காயம், சொறி, சிரங்கு, மூல நோய் போன்றவற்றுக்கு இதை அரைத்துப் பயன்படுத்துவார்கள். மலச்சிக்கல், குடல் புண்கள், மாதவிடாய் பிரச்னைகளுக்கும் இது அருமருந்து. தாவரங்களின் சாறை உறிஞ்சும் பூச்சிகளை விரட்ட மாரிகோல்ட் உதவுகிறது. இது ஒரு சிறந்த கொசுவிரட்டி. சூரிய ஒளி படும் இடத்தில் வைத்தால் வேகமாய் வளரும். இதன் வாசனை பிரச்னை இல்லை என்றால், கொசுக்கள் உற்பத்தியாகும் பாத்ரூம், சமையலறையிலும் மாரிகோல்ட்டை வைத்து வளர்க்கலாம். தினமும் இரண்டு மணி நேரம் எடுத்துப் போய் வெயிலில் காட்டினால் போதும். நன்றாக வளரும், கொசுக்களை விரட்டும்.

ரோஸ்மேரி (Rosemary)

இது ஒரு பசுமை மாறாத செடி. நன்கு வெப்பம் உள்ள, வறண்ட தட்ப வெப்பநிலையில் வளரக்கூடியது. இயல்பாகவே கொசுவை விரட்டும் ஆற்றல் கொண்டது. நான்கு சொட்டு ரோஸ்மேரி எண்ணெயையும், கால் கிண்ணம் ஆலிவ் எண்ணெயையும் கலந்து அந்தக் கலவையை உடலில் தேய்த்தால் கொசு நெருங்காது. இந்தக் கலவையை ஈரப்பதம் இல்லாத இடத்தில் வைத்துப் பாதுகாக்கலாம். தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். எளிதாக வளரக்கூடிய இயற்கைச் செடி.

புதினா (Mint)

டீ தயாரிக்கவும், சளி, ஜூரம் ஆகிய பிரச்னைகளுக்கு சிகிச்சைக்காகவும் பயன்படுவது புதினா. இதன் வாசனை பிடிக்காமல் கொசுக்கள் பறந்து விடும். இதிலிருந்து தயாரிக்கப்படும் திரவத்தை தெளித்தால் கொசுவை விரட்டி விடலாம். வீட்டிலுள்ள தொட்டியில், அறைக்குள் வைத்து மிக எளிதாக இதை வளர்க்கலாம். மண்ணில் ஒருமுறை பயிரிட்டால் தானாக, வேகமாக வளரும்.

பூண்டு (Garlic)

மூலிகை சார்ந்த மருத்துவத்தில் பூண்டுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. மிக அதிகமாக பூண்டு சாப்பிடுபவர்களை கொசுக்கள் கடிப்பதில்லை என்கிறார்கள். பூண்டு எண்ணெயையும் தண்ணீரையும் 1க்கு 5 என்ற கணக்கில் கலந்து துணியில் தோய்த்து, ஜன்னல், கதவு மற்றும் கொசு நுழையும் இடங்களில் தொங்கவிட்டால் கொசுக்கள் உள்ளே வராது.

Related Stories: