ரயில் நிலையங்களில் மீண்டும் பயணிகள் காசு போட்டு எடை பார்க்கும் இயந்திரங்கள்

வயது வித்தியாசம் இல்லாமல் ஓரு ஜாலிக்காகவும், ரயிலுக்கு காத்திருக்கும் நேரங்களில் பொழுதை கழிப்பதற்காகவும் அனைத்து வயது பயணிகளும் அதில் ஏறி நின்று எடை பார்ப்பது வழக்கம். எடை அட்டையின் பின்புறங்களில் ஆரூடம் அச்சிடப்பட்டு இருக்கும். குறி சொல்லும் சீட்டாக கருதி மகிழ்ச்சியடைவார்கள். ரயில்வே எடை இயந்திரங்களில் சில்லரைக் காசுகள் எப்போதும் நிரம்பி வழியும். தட்டினால் சில சமயம் இதில் காசு கொட்டுவதும் உண்டு. சில்லரைக் காசுகளுக்கு ஆசைப்பட்டு ஒரு சில பயணிகள் இயந்திரத்தை தட்டுவது, போதிய பராமரிப்புகள் இல்லாதது போன்ற பல காரணங்களால் முறையாக வருவாய் ரயில்வேக்கு கிடைக்க வில்லை. பின்னர் இந்த இயந்திரங்கள் படிப்படியாக செயல் இழந்தன. இந்நிலையில் நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் மீண்டும் காசு போட்டு எடை பார்க்கும் இயந்திரங்களை நிறுவிட ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் இத்திட்டம் பலனளிக்குமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் மாநில துணை பொதுச்செயலாளர் மனோகரன் கூறுகையில், கடந்த 2010 ம் ஆண்டு ரயில்வே வாரியம் காசு போட்டு எடை பார்க்கும் இயந்திரங் களுக்கான கொள்கைகளை வகுத்தது. அதில் இரண்டு ரூபாய் செலுத்தி எடைபார்க்க அனுமதிப்பது, ஒப்பந்தம் மூலம் இயந்திரங்களை நிறுவ அனுமதி ப்பது, சில்லரை வருவாயில் 60 சதவீதம் ரயில்வே பெற்றுக் கொண்டு மீதி 40 சதவீதத்தை இயந்திர கண்காணிப்பு மற்றும் பராமரிப்பிற்காக ஒப்பந்தக்காரர்களிடம் கொடுப்பது என்று வரையறுத்தது. மேலும் ஒப்பந்தத்தை தொழில்நுட்பம், பணமதிப்பு என இரண்டாக பிரித்து நடத்துவது, இரண்டிலும் தகுதி பெரும் நிறுவனம் வசம் ஒப்பந்தம் தருவது. ஒப்பந்தம் மூன்று ஆண்டு காலத்திற்கு வழங்குவது, எடை சீட்டில் விளம்பரத் திற்கு அனுமதிப்பது, இந்த வருவாயை இதர கணக்கு தலைப்பில் கணக்கிடு வது என்று அதில் தீர்மானித்தது. மாதத்திற்கு ஒருமுறை நிலைய அதிகாரி அல்லது போக்குவரத்து ஆய்வாளரை கொண்டு சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியர்கள் முன்நிலையில் திறப்பது, இதற்காக இரண்டு சாவி முறைகள் கையாள்வது, காசுகளை எண்ணி ரயில்வே கணக்கில் வரவு வைத்து, ஆண்டு இறுதியில் பிரித்து தருவது என்றும் முடிவு எடுத்தது.

கடந்த 9 ஆண்டுகளாக இத்திட்டத்தில் வாரியம் ஆர்வம் காட்டவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ம்தேதி வாரியத்தின் போக்குவரத்து வணிகப்பிரிவு இணை இயக்குநர் சுமித் சிங் 2010 ம் ஆண்டு வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு, இடம் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பொது மேலாளர்கள் இதற்கான ஒப்பந்தம் விடலாம் என வர்த்தக சுற்றறிக்கை (எண் 39) வெளியிட்டார். இதனால் வரும் 2020-21 நிதியாண்டுக்குள் முக்கியமான நகரங்கள், சந்திப்புகள், சுற்றுலா மற்றும் யாத்திரை ஸ்தலங்கள் இடம்பெறும் ரயில் நிலையங்களில் மீண்டும் காசு போட்டு எடை பார்க்கும் இயந்திரங்கள் நிறுவப்பட இருக்கின்றன. பயணிகள் எண்ணிக்கை, உடல் ஆரோக்கியம் தொடர்பான சமூக விழிப்புணர்வுகள் அதிகரித்து இருப்பதால் கணிசமான “சில்லரை” வருவாய் இத்திட்ட த்தில் நிச்சயம் கிடைக்கும். வரவேற்புக்குறிய திட்டம். என மனோகரன் கூறினார்.

Related Stories: