தமிழகத்தில் விபத்துக்கள் குறைய துவங்கி விட்டன: சமயமூர்த்தி, தமிழக போக்குவரத்துத்துறை கமிஷனர்

மத்திய அரசால் திருத்தப்பட்ட மோட்டார் வாகன மசோதா இன்னும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் சாலைவிதிகள் குறித்து எடுத்துறைக்கப்பட்டு வருகிறது. அப்போது மொபைலில் பேசுதல், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல், சாலை விதிகளை மதிக்காமல் வாகனங்களை இயக்குதல் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் மேடைநாடகங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு கொடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் விபத்துக்கள் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் 63 ஆயிரம் சாலை விபத்துக்கள் நடந்துள்ளது. 12,100 பேர் இதில் இறந்துள்ளனர். இந்திய அளவில் அதிக விபத்துக்கள் நடக்கும் மாநிலத்தில் மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது.

முன்னதாக தமிழகம் முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு நிலவரப்படி ஒருநாளைக்கு 33 பேர் சாலை விபத்துக்களால் இறப்பை சந்திக்கின்றனர். இது 2017ம் ஆண்டு 44 பேர் இறக்கும் நிலை இருந்தது. தற்போது விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்து நாள் ஒன்றுக்கு 31 பேர் இறக்கும் நிலை உள்ளது. சராசரியாக தமிழகத்தில் ஒருநாளைக்கு 165 விபத்துக்கள் நடக்கின்றன. இதற்கு நம்மிடம் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதே காரணம். 2.70 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மக்களிடத்தில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வால் விபத்துக்கள் குறைந்து வருகிறது.

திருத்தப்பட்ட மசோதாவின் மூலம் விபத்தை மேலும் குறைக்க முடியும். காரணம் வாகன விபத்துக்களால் வாகன ஓட்டி மட்டும் அல்லாது, அவர்களது குடும்பமும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். விபத்து என்பது ஒரு சம்பவம் தான். இது எதிர்பாராமல் நடக்கும். எனவே பாதுகாப்பாக வாகன ஓட்டி இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த மாதிரியான சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், அபராதம் அதிகமாக இருப்பதை தவிர வேறு பல நன்மைகள் மக்களுக்கு உள்ளது. குறிப்பாக ஆன்லைனில் எல்எல்ஆர் வாங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்து காத்திருக்க வேண்டியது இருக்காது. தற்போது டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பதற்கான காலஅவகாசம் மூன்று ஆண்டுகளாக உள்ளது.

புதிய சட்டத்தின் மூலமாக கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்பு ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒருமுறை வாகன ஓட்டி, தங்களது லைசென்ஸ்சை புதுப்பிக்க வேண்டும். இதன்மூலம் ஏராளமான வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயனடைவார்கள். அவர்கள் டாக்சி, கேப் போன்றவற்றை இயக்க முடியும். புதிதாக வாகனம் வாங்குவோர், எந்த ஆர்டிஓ அலுவலகத்தில் வேண்டுமானாலும் பதிவு செய்தும் கொள்ளும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மூலமாகவே முகவரியை மாற்றிக்கொள்ள முடியும். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் தரமான ஹெல்மெட் வழங்க முடியும் என்பது போன்ற புதிய வசதிகளும் உள்ளது. 2018ம் ஆண்டு நிலவரப்படி ஒருநாளைக்கு 33 பேர் சாலை விபத்துக்களால் இறப்பை சந்திக்கின்றனர். தற்போது விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்து நாள் ஒன்றுக்கு 31 பேர் இறக்கும் நிலை உள்ளது.

* விபத்துக்கள் குறையாது மாமூல் தான் அதிகரிக்கும்: யுவராஜ், தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர்:

மோட்டார் வாகன சட்டத்தின் படி, வாகன ஓட்டிகளுக்கான அபராதத்தை தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பாக போக்குவரத்து துறை ஆணையர் சமயமூர்த்தியை எங்களது சங்கம் சார்பில் சந்தித்து பேசினோம். அப்போது, அவர், இந்த சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக நாங்கள் அரசுக்கு அனுப்பியுள்ளோம் என்றார். வாகனஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக நீதிமன்றத்திற்கு சென்றால் என்ன நடவடிக்கை எடுக்கும் என்று ஆணையரிடம் கேட்டேன். அவர், நீதிமன்றம் சட்டப்படி தான் அபராதம் விதிப்பார்கள் என்கிறார். போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை பொறுத்தவரை, உயர்த்தப்பட்ட விகிதங்கள் குறித்து மக்களுக்கு பெரும் குழப்பம் தான்.

பலருக்கும் ஏன் அதிகமாக விதிக்கப்டுகிறது என்பது பற்றி புரியவில்லை. பல மாநிலங்களும் அபராதத் தொகையை நிராகரித்தும், குறைத்தும் உள்ள நிலையில், தமிழகமும் அப்படி செய்யும் என்று எதிர்பார்க்கின்றனர். காரணம், காவல்துறையினர், விதிமீறிய வாகனங்களை பிடித்து கொண்டு நீதிமன்றத்திற்கு சென்றால் சட்டப்படி அங்கு ஒரு அபராதம் விதிக்கப்படும். காவல்துறை, நீதிமன்றமும் வேறு மாதிரி அபராதம் வசூலித்தால் மக்களுக்கு குழப்பம் வராதா? போலீசார் வாகனங்களை பிடித்து கொண்டு இங்கு கட்டுகிறாயா?  நீதிமன்றத்திற்கு செல்கிறாயா என்று மிரட்டுவார்கள். இதனால், லஞ்சம் லாவண்யம் அதிகரிக்கும். இந்த சட்டம் உருவாகி விட்டது. எனவே அந்த சட்டத்தை மாற்ற வேண்டும்.  அப்போது தான் நீதிமன்றமும், காவல்துறையும் ஒரே மாதிரியான அபராத தொகையை வசூலிப்பார்கள்.

அதுவரை இந்த சட்டம் செல்லும் என்பதால் நீதிமன்றம் சட்டத்தின் படி தான் அபராதம் வசூலிப்பார்கள். எனவே, முதலில் இந்த சட்டத்தை மாற்றி அபராதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது ஹெல்மெட் போடாமல் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்க தொடங்கி விட்டனர். லாரிகளில் ஓவர் லோடு எனக்கூறி ஆர்டிஓக்கள் மாமூல் வசூலித்து வருகின்றனர். மத்திய அரசின் இந்த சட்டம் வந்தால் மாமூல் தொகை தான் அதிகமாகும். இந்த சட்டம் விபத்தை தடுக்க உதவாது. மாறாக, லஞ்சலாவண்யத்திற்கு தான் உதவும்.

இருக்கிற சட்டத்தை சரியாக அமல்படுத்தவில்லை. அதற்கான அதிகாரிகள் சரிவர இல்லை. பல வருடம் கழித்து இப்போது தான் சாலை பாதுகாப்பு கூட்டமே நடத்தியுள்ளனர். இந்த சூழ்நிலையில் சட்டத்தை அமல்படுத்துவது சரியாக இருக்குமா? முதலில் இந்த சட்டம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்கள் தவறு செய்வதை திருத்துவதற்கான வழிமுறைகள் செய்ய வேண்டும். மேலும், தமிழகத்தில் பெரும்பாலான சாலைகள் பல்லாங்குழியாக தான் காட்சியளிக்கிறது. சாலைகளில் உள்ள சிக்னல்களும் சரியில்லை. முதலில் சாலைகள் நன்றாக இருந்தாலே பாதி விபத்துகள் குறையும்.

தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டம் கட்டாயம் வராது என்று நம்புகிறோம். ஆனால், பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் அதையும் மீறி சட்டத்தை அமல்படுத்தினால் நாங்கள் நிச்சயம் எதிர்ப்போம். இவர்கள், ஏற்கனவே உள்ள சட்டத்தை வைத்து பல கோடி லஞ்சம் வாங்குகின்றனர். இந்த சட்டத்தை அதற்கு தான் பயன்படுத்துவார்கள். எனவே, சட்டத்தை கொண்டு வரும் முன்பு அனைத்தையும் அரசு ஆலோசிக்க வேண்டும். அப்போது தான் எந்த பிரச்னையும் வராது. மத்திய அரசின் இந்த சட்டம் வந்தால் மாமூல் தொகை தான் அதிகமாகும். இந்த சட்டம் விபத்தை தடுக்க உதவாது. மாறாக, லஞ்ச லாவண்யத்திற்கு தான் உதவும்.

* வீழ்ச்சி பாதையில் தத்தளிக்கும் லாரி தொழில்: சென்னகேசவன், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகக்குழு உறுப்பினர்:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள, திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் ஏற்புடையதாக இல்லை. அபராதக்கட்டணம் என்பது லாரி உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மற்ற மாநிலங்களை போல தமிழகத்திலும் பெரிய அளவில் அபராதக்கட்டணத்தை குறைக்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டினால் வசூலிக்கப்படும் அபராத தொகை ரூ.500ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உரிய தகுதியின்றி வாகனம் ஓட்டினால், ரூ.500 அபராதம் உள்ளது. புதிய சட்டத்தின் மூலம் ரூ.10 ஆயிரமாகவும், சீட்பெல்ட் அணியாவிட்டால் ரூ.100 அபராதத்தொகை, ரூ.1,000 ஆகவும், பெர்மிட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் அதிக சுமை ஏற்றினால் ரூ.20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த அபராதங்கள், பெரும்பாலும் லாரி உரிமையாளர்களையே பெரிய அளவில் பாதிக்கும். டிரைவர்கள் சம்பளத்திற்கு மட்டுமே பணியாற்றுபவர்கள். எனவே இந்த சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாகும். தற்போது நடைமுறையில் உள்ள அபராதத்தொகையே தொடர வேண்டும். இந்தியா முழுவதும் 45 லட்சம் லாரிகள் உள்ளன. இந்த அபராதத்தொகை உயர்வை கண்டித்து அகில இந்திய அளவில் வரும் 19ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். தமிழகத்தில் 4.6 லட்சம் லாரிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த தொழிலை நம்பி இந்தியா முழுவதும், டிரைவர், உதவியாளர், உரிமையாளர் மட்டுமே 2 கோடி பேர் உள்ளனர். இதுதவிர துணைத்தொழிலாக மெக்கானிக், பெயின்டர், ஒப்பந்ததாரர்கள், சுமை தூக்குவோர், புரோக்கர்கள் என மொத்தம் 10 கோடி பேர் உள்ளனர்.

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இத்திட்டத்தால், இவர்கள் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக உரிமையாளர்களுக்கு அதிக பாதிப்பு உண்டாகும். நாட்டில் ஏற்கனவே ஜிஎஸ்டி வரியால் சிறு, குறு தொழில்கள் முடங்கியுள்ளது. இதனால் தற்போது தமிழகத்தில் உள்ள 4.6 லட்சம் லாரிகளில் 1.5 லட்சத்திலிருந்து 2 லட்சம் வரையிலான லாரிகள் லோடு கிடைக்காமல், 10 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு லாரிக்கு லோடு கிடைப்பதற்கு 10 நாட்கள் ஆகும் நிலை உள்ளது. இச்சட்டத்தால், லாரி தொழில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கப்போகிறது. மேலும் போக்குவரத்து பில் என்ற புது முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலமாக 15 ஆண்டுகளுக்கு உட்பட்ட வாகனத்தை கழிவு செய்ய போகிறார்கள்.  

கடந்த 6 மாதங்களாக புது லாரிகளை வாங்க யாரும் ஆர்வம்காட்டவில்லை. இதனால் தான் லாரி தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டது.

இதேபோல், 44ஏஇ என்ற வருமான வரிச்சட்டத்தில் புதிய விதி சேர்க்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை ஒருலாரி வைத்திருக்கும் உரிமையாளருக்கு சராசரியாக மாத்திற்கு ரூ.7,500; ஆண்டுக்கு ரூ.90 ஆயிரம் வருமானம் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்போது வண்டியின் மொத்த எடையைக்கொண்டு வருமானம் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு லாரி 25 டன் இருக்கிறது என்று வைத்துக்கொண்டால், உரிமையாளருக்கு ஒரு டன்னுக்கு ரூ.1,000 வீதம், ரூ.25 ஆயிரம் மாத வருமானம் என நிர்ணயம் செய்கிறார்கள். ஆண்டுக்கு ரூ.3 லட்சம் என சொல்லப்பட்டுள்ளது. இதுவும் லாரி வாங்காததற்கு ஒரு காரணமாகவுள்ளது. இதுபோன்ற பிரச்னைகளால் லாரி தொழில் முற்றிலும் முடங்கும். புதிய சட்டத்தால், லாரி தொழில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கப்போகிறது. மேலும் போக்குவரத்து பில் என்ற ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலமாக 15 ஆண்டுகளுக்கு உட்பட்ட வாகனத்தை கழிவு செய்ய போகிறார்கள்.

* பைக்கை மட்டும் போலீஸ் குறிவைப்பது சரியல்ல: வி.எஸ்.சுரேஷ், வாகன தீர்ப்பாய வழக்கறிஞர்:

புதிய சட்டத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடியதும், ஏற்றுக்கொள்ள முடியாததும் உள்ளது. தற்போது ஹெல்மெட் அணியாவிட்டால், முதல் முறை அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்பிறகு லைசென்ஸ் ரத்து செய்வதாக கூறுகிறார்கள். இது அச்சுறுத்தும் கொள்கையாக இருக்கிறது. தண்டனை என்பது நாம் தெரியாமல் சென்றால், ரூ.1,000, ரூ.2,000 கட்ட வேண்டும் என்பது எல்லாம் மிக அதிக அபராதத்தொகை: இரண்டு விதமான தண்டனைக்குத்தான் போலீசார் சுற்றிச்சுற்றி வந்து நடவடிக்கை எடுக்கிறார்கள். முதலில் ஹெல்மெட் அணியாதது; அடுத்தது கார் ஓட்டுனர்கள் சீட்பெல்ட் அணியாதது. சாலையில் இருந்த பேனர் விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டது. இதற்கு ரோடு ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததே காரணம். நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஓட்டல்கள் நிறுவனங்கள் வாகனங்களை வெளியில் நிறுத்த அனுமதிக்கிறார்கள். குறிப்பாக அண்ணாசாலை போன்ற முக்கிய இடங்களில் சாலைகளிலேயே வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதுவும் ஒருவிதமான போக்குவரத்து விதிமீறல் தான். இதை போலீசார் கண்டுகொள்வதில்லை. ஹெல்மெட், சீட்பெல்ட்டிற்கு மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஷேர் ஆட்டோக்களில் நிர்ணயம் செய்யப்பட்ட பயணிகளை விட கூடுதலாக பயணிகள் ஏற்றப்படுகின்றனர். இதற்கு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இதேபோல் லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றக்கூடாது. அதிலும் பலர் பயணம் செய்கிறார்கள். இதுபோல் பல குற்றங்கள் நடக்கின்றன. மாநகரில் மணல் லாரி, தண்ணீர் லாரி அதிவேகமாக பயணிக்கிறது. சிக்னலில் அச்சத்துடன் நிற்க வேண்டிய நிலை உள்ளது.

சட்டம் என்ன சொல்கிறது என்றால், வாகனத்தை சாலையில் ஓட்டுவதற்கு கற்றுக்கொள்வதே தவறு என்கிறது. ஆனால் சாலையில் தான் மக்கள் கற்றுக்கொள்கிறார்கள். பழைய சட்டத்தில் 5,000 சதுர அடியில் ஒரு ஓட்டுனர் பயிற்சிப்பள்ளி இருக்க வேண்டும் என்று உள்ளது. அந்த பள்ளியில் அனைத்து வாகனங்களையும் ஓட்டுவதற்கு நாம் கற்றுக்கொண்டு வரவேண்டும். ஆர்டிஓ அலுவலகங்கள் சிறியதாக இருக்கிறது. அதில் எந்த வாகனத்தை ஓட்ட கற்றுக்கொள்ள முடியும். வெளிநாடுகளில் இந்த விஷயத்தில் கடும் விதிமுறைகள் உள்ளன. ஆனால், நம் நாட்டில் இந்த பிரச்னைகளை பார்ப்பதே இல்லை. கோர்ட் சொன்னாலும் கண்டுகொள்வதில்லை. எனவே ஆரம்பத்திலேயே குற்றங்களை தடுக்க வேண்டும். இங்கு வெறும் அச்சுறுத்தல் மட்டுமே உள்ளது. அரசு பஸ்கள் விபத்துக்குள்ளானால், சம்பந்தப்பட்ட டிரைவருக்கு உடல்பரிசோதனை நடத்தப்படும்.

ஆனால் லாரி டிரைவர் உள்ளிட்ட மற்றவர்களுக்கு இதுபோல் பரிசோதனை செய்யப்படுவது கிடையாது. எனவே முதல்முறை அபராதம் ரூ.500, இரண்டாவது முறை ரூ.700, மூன்றாவது முறை ரூ.1,000 என நிர்ணயம் செய்யலாம். இதேபோல் சாலை பாதுகாப்பு வாரம் முறையாக கொண்டாடப்படுவது இல்லை. இதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் விபத்துக்கள் குறையும். இதேபோல் அரசு பஸ்களில் படிகளில் பயணிக்கிறார்கள். இதுவும் ஒருவிதமான போக்குவரத்து விதிமீறலாகும். சென்னையில் அண்ணாசாலை, காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரை சாலையில் பைக் ரேஸ் நடக்கிறது. அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தி பிடிக்கலாம்.   

ரேஸ் பைக் ஓட்டுபவர்கள் பற்றி சொல்லவே வேண்டாம்; சென்னை போன்ற நகரங்களில் பைக் ரேஸ் அட்டகாசம் அதிகம். இதை போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதே இல்லை. இதுபோல் ஏராளமான விதிமீறல்கள் உள்ளன. தனியார் ஆம்னி பஸ்கள் சிட்டிக்குள் வரக்கூடாது. ஆனால் பகல் நேரத்திலேயே இயக்குகிறார்கள். சின்ன ஆட்களை பிடிக்கப்படுகிறார்கள். பெரிய ஆட்களை எதுவும் சொல்வதில்லை. சென்னையில் அண்ணாசாலை, காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரை சாலையில் பைக் ரேஸ் நடக்கிறது. அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தி பிடிக்கலாம்.

Related Stories: