கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா, போதை மாத்திரை விற்ற 2 பேர் பிடிபட்டனர்

ஆலந்தூர்: பரங்கிமலை, நசரத்புரம் பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்ற பரங்கிமலை இந்திராநகரை சேர்ந்த காமேஷ் (22), ஆலந்தூரை சேர்ந்த ஸ்ரீநாத் (22) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் ஆந்திராவில் இருந்து போதை மாத்திரை, கஞ்சா ஆகியவற்றை வாங்கி, வந்து இங்குள்ள கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 48 போதை மாத்திரைகள், 20 கிராம் கஞ்சா பொட்டலங்கள், நான்கு சிம்கார்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

* திருவொற்றியூர் கலைஞர் நகரை சேர்ந்த குப்பன் மகள் கோமதி (16), திருவொற்றியூர் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவர், நேற்று மதியம் உணவு இடைவேளை நேரத்தில் பள்ளியில் இருந்து நண்பர் தினேஷ் (22) என்பவருடன் பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். கே.வி.குப்பம் அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு பைக் மீது மோதியதில் கோமதி சம்பவ இடத்திலேயே இறந்தார். தினேஷ் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

* வடபழனி வேல்முருகன் காலனி பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த பழைய வண்ணாரப்பேட்டை மண்ணப்பன் 2வது லேன் பகுதியை சேர்ந்த புரோக்கர் முகமது இப்ராஹிம் (60) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 இளம்பெண்கள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

* ராயபுரம், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் ஷேர் ஆட்டோக்களில் சவாரி செல்வது போல் நடித்து, பயணிகளிடம் செயின், செல்போன் அபேஸ் செய்து வந்த 3 பெண்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

* சூளைமேடு பகுதியை சேர்ந்த பச்சையம்மாள் (64) என்பவரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட அண்ணாநகர் மேற்கு வெல்கம் காலனியை சேர்ந்த கலாநிதி (எ) வசந்த் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

* ஏழுகிணறு, வெங்கட மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் ராஜி துனியா (42). இவர், அதே பகுதியில், நகை பட்டறை வைத்துள்ளார். இவரது பட்டறையில் இருந்து 1 கிலோ 450 கிராம் நகையுடன் மாயமான மேலாளர் மேற்கு வங்கத்தை சேர்ந்த சுரேந்தர் (32) உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

* ராயப்பேட்டை ஐயம்பெருமாள் தெருவில்  உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி  வைத்திருந்த திருவல்லிக்கேணி முத்தையா முதலி தெருவை சேர்ந்த ஷாகுல் ஹமீது  (31), ராயப்பேட்டை ஹாஜி ஷேக் முகேன் தெருவை சேர்ந்த வேணுகோபால் (48)  ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 311 கிலோ குட்கா மற்றும் பைக், 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

* அசாம் மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த மொச்சலேம் உத்தின் (30), மணி ரூகன் (26) ஆகியோரை போலீசார் சோதனை செய்தபோது, 15 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், சென்னையில் கஞ்சா விற்க வந்தது தெரிந்தது. அவர்களை கைது செய்தனர்.

Related Stories: