சென்னையில் ஆன்லைன் தங்க விலை சூதாட்டம் 12 நாளில் 2 கோடி சம்பாதித்த கல்லூரி மாணவன் அதிரடி கைது

* கட்டுக்கட்டாக 53 லட்சம் பணம் பறிமுதல்

* ஹூக்கா பார் உரிமையாளருக்கு போலீஸ் வலை

சென்னை: சென்னையில் ஆன்லைன் தங்க விலை சூதாட்டத்தில் கடந்த 12 நாட்களில் 2 கோடி சம்பாதித்த கல்லூரி மாணவன் உட்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது ெசய்தனர். அவர்களிடம் இருந்து கட்டுக்கட்டாக 53 லட்சம் பணம், லேப்டாப், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை சூளை ஹண்டர்ஸ் சாலையில் உள்ள ஆற்காடு காம்ப்ளக்ஸ் ஒன்றில் தங்கம் மற்றும் கிரிக்கெட் சூதாட்டம் நடப்பதாக, அதில் ரூ.30 லட்சம் இழந்த நபரின் உறவினர் ஒருவர் இணை கமிஷனர் சுதாகரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். அதைதொடர்ந்து, வேப்பேரி உதவி கமிஷனர் மகேஸ்வரி தலைமையில் தனிப்படையினர் நேற்று முன்தினம் இரவு சூளை பகுதியில் ரகசியமாக கண்காணித்தனர்.  அப்போது, ஆற்காடு காம்ப்ளக்சில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர்கள் நடமாடிக் கொண்டிருந்தனர்.

பின்னர் சூதாட்டத்தில் ஈடுபடுவது போல், ஒரு நபரிடம் பணத்தை கொடுத்து சூதாட்டம் நடைபெறும் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு சூதாட்டத்திற்கு தலைமை தாங்கி இருந்த சவுகார்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவன் ரகுல் டி.ஜெயின் என்பவரை சந்தித்து சூதாட்டத்தில் கலந்துகொள்ள வந்ததாக தெரிவித்துள்ளார். அப்போது ரகுல் எவ்வளவு பணம் கொண்டு வந்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளார். மேற்கு இந்திய தீவுகளில் கரேபியன் லீக் தொடருக்கான கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதற்கான சூதாட்டம்தான் இன்று என்று கூறியுள்ளார். அதற்கு போலீசார் அனுப்பிய நபர், 40 லட்சம் பணத்துடன் வந்திருப்பதாக ஒரு பையை காட்டியுள்ளார். அதன்பிறகு ரகுல் அந்த நபரை சூதாட்டத்தில் சேர்த்துள்ளார். பிறகு உள்ளே சென்ற நபர், சூதாட்டம் நடப்பதை உறுதி ெசய்து போலீசாருக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அளித்தார்.  அதன்படி உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் அதிரடியாக அலுவலகத்திற்குள் புகுந்து சோதனையிட்டனர்.

அப்போது, சர்வதேச தங்க விலை மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான சூதாட்டத்தில் ஈடுபட்ட ரகுல் டி.ஜெயின் (24) மற்றும் சவுகார்பேட்டை முத்தையப்பன் தெருவை சேர்ந்த தினேஷ் (29) உட்பட 6 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து கட்டுக்கட்டாக 53,33,500 பணம், 3 லேப்டாப், 3 செல்போன்கள் மற்றும் பணம் எண்ணும் இயந்திரம் ஒன்றும் பறிமுதல் ெசய்யப்பட்டது. பின்னர் அனைவரையும் வேப்பேரி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது நுங்கம்பாக்கத்தில் ஹூக்கா பார் நடத்தும் ஜெய்ஷா என்பவர் இந்த சூதாட்டத்திற்கு தலைமை வகித்துள்ளது தெரியவந்தது. ஜெய்ஷா தனது பாருக்கு வரும் வசதியான வாலிபர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை மூளை சலவை செய்து குறைந்த முதலீட்டில் அதிகம் சம்பாதிக்கலாம் என்று ஆசைகாட்டி சூதாட்டக் குழுக்களில் உறுப்பினராக சேர்த்து விடுவார்.

தற்போது சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் தங்க விலைக்கு ஏற்றப்படி ஆன்லைன் மூலம் பல கோடி ரூபாய் வரை சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாக சூளையில் வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், கடந்த 12 நாட்களில் தங்கத்தின் மீதான சூதாட்டத்தில் கல்லூரி மாணவன் ரகுல் டி.ஜெயின் 2 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது தெரியவந்தது. பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் டென்னிஸ் போட்டிகளுக்கான சூதாட்டமும் நடந்து உள்ளது தெரியவந்தது.

இதையடுத்து சூளையில் சூதாட்டத்திற்கு தலைமை தாங்கிய கல்லூரி மாணவன் ரகுல் டி.ஜெயின், தினேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த சூதாட்டத்திற்கு மூளையாக இருந்த ஜெய்ஷாவை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜெய்ஷாவுக்கு பெங்களூரு, மும்பை, கொல்கத்தா பகுதியில் உள்ள சூதாட்ட கும்பலுடன் நேரடி தொடர்பு உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், ஜெய்ஷாவுக்கு சர்வதேச சூதாட்ட கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனவே தலைமறைவாக உள்ள ஜெய்ஷாவை பிடித்தால்தான் சூதாட்டத்தின் பின்னணி குறித்து முழுமையாக தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: