அழிந்து வரும் சுறா

நன்றி குங்குமம் முத்தாரம்

நாற்பத்து நான்கு கோடி ஆண்டுகளுக்கு மேலாக கடலில் வாழ்ந்து வரும் ஓர் உயிரினம் சுறா மீன். 16-ம் நூற்றாண்டு வரை சுறா மீனை கடல் நாய் என்று நினைத்து வந்தார்கள். கடல் வாழ் உயிரினங்களில் வேட்டையாடும் சமூகத்தைச் சேர்ந்தது இந்த மீன். சின்ன அளவிலிருந்து மாபெரும் அளவிலான இதன் தோற்றம் எல்லோரையும் பயமுறுத்தச் செய்வது.  

ஐநூறுக்கும்  மேற்பட்ட சுறா இன வகைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதில் சில இனங்களில் நூற்றுக்கும் குறைவான சுறாக்களே உள்ளன. உலகிலுள்ள அனைத்து கடல்களிலும் சுறா மீன்கள் வசிக்கின்றன. சுமார் 2000 மீட்டர் ஆழத்தில்தான் இவை இருக்கும்.  ஆச்சர்யமாக எப்போதாவதுதான் கடலின் மேற்பகுதிக்கு சுறாக்கள் வரும். இப்படிப்பட்ட சுறாவும் அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. மனிதனின் வணிகப் பேராசையே இதற்கு முழுமுதற் காரணம்.

தவிர, கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளாலும் சுறா மீன்களுக்குப் பெரிதும் பாதிப்பு. சில கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிற டைனோசர்களை இப்போது திரைப்படங்களில் மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது. இதே மாதிரியான ஒரு நிலை சுறாவுக்கும் வரலாம். இன்னும் 100 வருடங்களுக்குப் பிறகு பிறக்கும் குழந்தைகள் சுறா மீனைப் புகைப்படம் அல்லது திரைப் படத்தில் மட்டுமே பார்க்க முடியும்.

அப்படியான ஒரு அவல நிலையில் இருக்கின்றன சுறாக்கள். உணவு, எண்ணெய், மருத்துவம் உட்பட பல்வேறு காரணங் களுக்காக வருடந்தோறும் 10 கோடி சுறாக்கள் வேட்டையாடப்படுகின்றன. முக்கியமாக துடுப்புகளுக்காக மட்டுமே அதிகளவில் சுறாக்கள் கொல்லப்படுகின்றன. காரணம், ஆசிய நாடுகளில் சுறா துடுப்பு சூப் ரொம்பவே பிரபலம்.

துடுப்பை மட்டும் எடுத்துவிட்டு, இறந்த சுறா மீனின் உடலைக் கடலில் போடும் அவலமும் அவ்வப்போது அரங்கேறுகிறது. ஒரு சுறா குட்டி போட்டு அது வளர கொஞ்ச காலம் பிடிக்கும். அப்படி ஒரு சுறா வளர்வதற்குள் 100 வளர்ந்த சுறாக்கள் மனிதர்களால் அழிக்கப்படுகின்றன. என்ன இருந்தாலும் சுறா மீன் களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தேசத் துக்கும் இருக்கிறது.

Related Stories: