மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்!

நன்றி குங்குமம்

இப்போது உலகை அச்சுறுத்தும் அசுரன், மைக்ரோபிளாஸ்டிக்ஸ். நாம் வேண்டாமென்று தூக்கி வீசுகின்ற பிளாஸ்டிக் குப்பைகளில் பெரும்பாலானவை நதிகளின் வழியாகவும் நேரடியாகவும் கடலில் கலக்கின்றன. கடந்த வருடம் மட்டும் சுமார் 3 லட்சம் டன் பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கலந்திருப்பதாக ஓர் ஆய்வு சொல்கிறது.விஷயம் இதுவல்ல.

‘‘கடலில் கலக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை விட கடலில் கலக்காதவை இன்னும் ஆபத்தானவை...’’ என்கிறது சமீபத்திய ஆய்வு. மாபெரும் குப்பைமேடுகளிலும், கடற்கரைகளிலும், நதியின் ஓரங்களிலும், காடுகளிலும், மக்களின் வாழ்விடங்களிலும் மலை மலையாய் குவிந்திருக்கும் குப்பைகளுக்கு நடுவில் அகப்பட்டுக் கொள்ளும் பிளாஸ்டிக்குகள் நாளாக நாளாக சிதைவுறுகின்றன.

அப்படிச் சிதைகின்ற பிளாஸ்டிக்குகளின் சில பகுதிகள் உடைந்து துகள்களாகப் பரிணமிக்கின்றன. 5 மில்லி மீட்டருக்கும் குறைவான நீள, அகலமுள்ள இந்தத் துகள்கள்தான் ‘மைக்ரோபிளாஸ்டிக்ஸ்’. சில நேரங்களில் கடலில் கலந்துள்ள பிளாஸ்டிக் குப்பைகளிலிருந்தும் இவை உருவாகின்றன. மைக்ரோபிளாஸ்டிக்கை விட சிறிய அளவுள்ள பிளாஸ்டிக்கை ‘நானோ’ பிளாஸ்டிக் என்கின்றனர்.

அவ்வளவு சீக்கிரத்தில் நம் பார்வைக்கு அகப்படாத இந்தப் பிளாஸ்டிக் துகள்கள் காற்று, உணவுப்பொருள், குடிநீரில் சுலபமாகக் கலந்துவிடுகின்றன. உலகில் வாழும் நாற்பது சதவீத மக்கள் ஏதொவொரு வகையில் மைக்ரோபிளாஸ்டிக்ஸை தினமும் நுகர்வது வாடிக்கையாகிவிட்டது.

மனிதர்கள் மட்டுமல்லாமல் காட்டு உயிரினங்களும், பறவைகளும் மைக்ரோபிளாஸ்டிக்குகளுக்குப் பலியாவதுதான் இன்னும் சோகம்.

தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை, வாகனப் புகையைவிட பிளாஸ்டிக் துகள்களால் ஏற்படும் காற்று மாசுபாடு பேராபத்தானது. இது வனாந்திரங்களில் வீசும் காற்றையும் மாசுபடுத்துகிறது.

நீண்ட நாட்களாக மைக்ரோபிளாஸ்டிக்ஸ் கலந்த காற்றைச் சுவாசிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள் வர வாய்ப்பிருக்கின்றது. ‘‘கடலில் கலந்திருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளைவிட மைக்ரோபிளாஸ்டிக்ஸின் அடர்த்தியும் எடையும் மிகமிகக் குறைவுதான் என்றாலும் இதைக் கட்டுப்படுத்துவது அவ்வளவு சாதாரண விஷயமில்லை...’’ என்கின்றனர் சூழலியலாளர்கள்.

Related Stories: