திருச்செந்தூர் கடலில் தடையை மீறி பக்தர்கள், சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த கடற்காற்று காரணமாக திருச்செந்தூர் கடலில் 3 நாட்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அந்த தடையை மீறி இன்று காலை திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். தென்மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடல்பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் கடற்காற்று மணிக்கு 45 கிமீ முதல் 55 கிமீ வரையில் இருக்கும் என்றும் இதன் காரணமாக கடலில் எழும் அலைகளின் உயரம் குறைந்த பட்சம் 2.8 மீட்டர் முதல் 3.4 மீட்டர் உயரம் வரையில் இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த வானிலை, கடற்பயணத்திற்கும் மீன்பிடிக்கவும் உகந்தது அல்ல என்றும் இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் 3 நாட்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் மீன்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

மேலும் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும் கடலோர காவல் படை மற்றும் மரைன் போலீஸ் மூலம் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு வங்க கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து திருச்செந்தூர் கடலில் 3 நாட்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 3 மணி முதல் போலீசார் திருச்செந்தூர் கடலில் குளித்துக்கொண்டிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களை உடனடியாக அப்புறப்படுத்தினர். மேலும் தொடர்ந்து பக்தர்கள் யாரும் கடலில் குளிக்க கூடாது என எச்சரித்தனர். இந்த தடை உத்தரவு இன்றும், நாளையும் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தடையை மீறி கடலில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். போலீசார் எச்சரித்தும் யாரும் அதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை. இருப்பினும் தொடர்ந்து போலீசார் பக்தர்களை எச்சரித்த வண்ணமே இருந்தனர்.

Related Stories: