உசிலம்பட்டி அருகே குடிநீர் வழங்க கோரி மக்கள் சாலை மறியல்: 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் இன்று காலை மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடுகபட்டியில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஊராட்சி சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. வறட்சி காரணமாக 6 மாதமாக சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. முறையாக குடிநீர் வழங்க கோரி மக்கள் சாலை மறியல், முற்றுகை போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று காலை காலி குடங்களுடன் திரண்டு உசிலம்பட்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தி.விலக்கு பஸ் நிறுத்தம் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் பிரச்னையை தீர்க்காத அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். உசிலம்பட்டி இன்ஸ்பெக்டர் சார்லஸ், ஆர்ஐ அய்யாவு பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து மக்கள் கூறுகையில், ‘கடந்த 6 மாதமாக குடிநீர் பிரச்னையால் பரிதவித்து வருகிறோம். நல்ல தண்ணீர் ஒரு குடம் ரூ.10, உப்பு தண்ணீர் 3 குடம் ரூ.10க்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். டிராக்டர்களில் கொண்டு வரப்படும் தண்ணீர் சுகாதாரமாக இல்லையென அதிகாரிகள் கெடுபிடி செய்வதால் தண்ணீர் டிராக்டர்களும் வருவதில்லை. இதனால் கஷ்டப்படுகிறோம்’ என்றனர்.

Related Stories: