நாமக்கல் அருகே வகுப்பு ஆரிசியர் கண்டித்ததால் நேர்ந்த விபரீதம்: பொறியியல் மாணவர் தற்கொலை

நாமக்கல்: நாமக்கல் அருகே பொறியியல் மாணவன் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதற்காக பேராசிரியர்கள் கண்டித்ததால் மனமுடைந்து இந்த விபரீத முடிவை மாணவன் எடுத்ததாக கூறப்படுகிறது. நாமக்கல் அடுத்த பழைய பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் தீபக். இவர் திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவன் தீபக் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த பேராசிரியர்கள் மாணவரை கண்டித்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்ததோடு மட்டுமின்றி பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வருமாறும் சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தினால் மனமுடைந்த மாணவன் வீட்டிற்கு செல்லாமல் திருச்சி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் அருகே தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த ரயில்வே மற்றும் நாமக்கல் போலீசார் ரயிலில் அடிப்பட்டு தலைத் துண்டாகி கிடந்த மாணவனை கைப்பற்றி உடற்கூராய்விற்காக நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு காரணம் ஏதேனும் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: