ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு

சென்னை : ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஒரு மாத பரோலில் உள்ள நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிக்கப்பட்டது. நளினி மேலும் ஒரு மாதம் பரோல் கோரிய நிலையில் உயர்நீதிமன்றம் 3 வாரம் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக நளினிக்கு பரோலை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்த நளினி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக பேரறிவாளன், முருகன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் உள்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஏழு பேரில் ஒருவராகிய நளினி, தனது மகள் திருமணத்துக்காக 6 மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

நளினிக்கு நிபந்தனைகளுடன் பரோல்

இந்த வழக்கில் நளினி தரப்பு மற்றும் தமிழக அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், 6 மாதங்கள் பரோல் வழங்க சட்டத்தில் இடமில்லை எனக்கூறி, நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், பரோலில் உள்ள ஒரு மாதமும் நளினி வேலூரை விட்டு வெளியே செல்லக்கூடாது, அரசியல் பிரதிநிதிகள் மற்றும் ஊடகங்களை சந்திக்கக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, 28 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஜூலை மாதம் 25ம் தேதி சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் நளினி. வேலூர் ரங்காபுரம் புலவர் நகரில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவை மாநில துணை பொது செயலாளர் சிங்காராயர் வீட்டில் அவர் தங்கி மகளின் திருமண ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.

நளினிக்கு மேலும் 3 மாத பரோல் நீட்டிப்பு

இந்நிலையில், மகளின் திருமண ஏற்பாடுகள் இன்னும் நிறைவடையதால் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி நளினி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் வரும் 25-ம் தேதியுடன் பரோல் முடிவடைய உள்ள நிலையில்,  பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி அரசுக்கு ஆகஸ்ட் 8ம் தேதி கோரிக்கை மனு அளித்ததாகவும் ஆனால் அந்த மனுவை ஆகஸ்ட்13ல் நிராகரித்து அரசு உத்தரவிட்டளது. மகள் திருமண ஏற்பாடுகளை முடிக்க முடியாததால் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க சிறை நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், நிர்மல் குமார் அமர்வு, இன்றைக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைத்தனர். இதையடுத்து இந்த மனுவின் இன்றைய வழக்கு விசாரணையின் போது, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஒரு மாத பரோலில் உள்ள நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள பரோல் நிபந்தனைகள் தொடரும் என்றும் உயர்நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.

Related Stories: