ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட திட்டப்பணிகளில் தொகுதி எம்பி, எம்எல்ஏக்களை உறுப்பினராக சேர்க்கவேண்டும்... துரைமுருகன் வலியுறுத்தல்

மதுரை: ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட திட்டப்பணிகளில் தொகுதி எம்பி, எம்எல்ஏக்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டுமென, சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் துரைமுருன் கூறினார். தமிழக சட்டப்பேரவை பொதுதுக்கணக்கு குழு தலைவராக திமுக சட்டமன்ற குழுவின் துணைத்தலைவர் துரைமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் இந்த குழு உறுப்பினர்களாக எம்எல்ஏக்கள் பழனிவேல் தியாகராஜன், கீதா, பாஸ்கர், முகமது அபூபக்கர், உதயசூரியன், டி.ஆர்.பி.ராஜா, மோகன், பரமசிவம், நடராஜன் மற்றும் குழு செயலாளர் சீனிவாசன், இணைச்செயலாளர் பத்மகுமார், துணைச்செயலாளர் தேன்மொழி உள்ளிட்டோர் மதுரையில் நடைபெறும் பல்வேறு திட்டப்பணிகளை நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் துரைமுருகன் தலைமையில் நடந்த கூட்டத்தில், மாநில தணிக்கை குழு தெரிவித்துள்ள அறிக்கையின்படி, மாவட்டத்தில் நடந்து வரும் அரசு துறைகளின் திட்டப்பணிகள், செலவினங்கள், பணிகளின் தற்போதைய நிலைகள் குறித்து துறைவாரியாக ஆய்வு செய்தனர். பின்னர், திட்டப்பணிக்கான நிதியை அதிகரித்தது ஏன், அதற்கு முறையாக அனுமதி பெறாதது ஏன் என அதிகாரிகளிடம் விசாரித்தனர். சில துறை அதிகாரிகள் கொடுத்த விளக்கம் சரியில்லாத காரணத்தால், அந்த அதிகாரிகளை எச்சரித்தனர். கூட்டத்தில், கலெக்டர் ராஜசேகர், எஸ்பி மணிவண்ணன், எம்எல்ஏக்கள் மூர்த்தி, டாக்டர் சரவணன், எம்பி சு.வெங்கடேசன், மாநகராட்சி கமிஷனர் விசாகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் குழு தலைவர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: அரசின் பல்வேறு துறைகளின் பணிகள் குறித்து ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை கொடுத்துள்ளார். அந்த அறிக்கை அடிப்படையில் மாவட்டத்தில் அவர்கள் தெரிவித்த துறைகள் மீது ஆய்வு செய்தோம். அரசுத்துறையில் நடந்து வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தோம். அதற்கு அவர்கள் பதில் கூறியுள்ளனர். கூட்டத்தில் விவாதித்தது தொடர்பாக கூற முடியாது. இந்த அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். பொதுவாக அரசுத்துறையில் திட்டப்பணிகளில் குறைபாடுகளும், தேக்கநிலையும் உள்ளதை கண்டுபிடித்தோம். இதுதொடர்பாக அந்த அதிகாரிகளை எச்சரிக்கை செய்துள்ளோம்.

ப.சிதம்பரம் மிகப்பெரிய வழக்கறிஞர். மத்திய அரசு போட்டுள்ள இவ்வழக்கில் அவர் சாதனை படைப்பார். தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பணிகளில் எதிர்க்கட்சிகளின் எம்எல்ஏக்களை உறுப்பினர்களாக சேர்க்கவில்லை. எங்களது தொகுதியில் என்ன நடக்கிறது என தெரியவில்லை. அரசு அந்தந்த தொகுதி எம்எல்ஏ, எம்பிக்களை குழு உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். முன்பு மாவட்டத்தில் நடக்கும் அரசு விழாவிற்கு முறையாக எம்எல்ஏக்களுக்கு அழைப்பிதழ் நேரில் வந்து கொடுப்பார்கள். தற்போது பிஆர்ஓ செல்போனில் தொடர்பு கொண்டு விழா நடைபெறுகிறது என ஏதோ கடமைக்கு சொல்கின்றனர். நீங்கள் வரவேண்டாம் என்பது போல் நடந்து கொள்கின்றனர். இது தவறு. அரசும், அதிகாரிகளும் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: