முக்கொம்பு மேலணை உடைந்து ஓராண்டு நிறைவு... புதிதாக தடுப்பணை கட்டும் பணி அஸ்திவாரத்தோடு நின்றது

முசிறி: முக்கொம்பு மேலணை உடைந்து ஓராண்டு நிறைவு பெற்றது. இந்த இடத்தில் சீரமைப்பு பணி முடிந்ததால் பிரியாணி விருந்து வைத்து கொண்டாடினர். ஆனால் புதியதாக பாலம் கட்டும் பணி அஸ்திவாரத்தோடு நின்றதால், வெள்ளம் ஏற்பட்டால் மீண்டும் தண்ணீர் கடலுக்கு செல்லும் நிலை உள்ளது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா முக்கொம்பு மேலணையில் உள்ள தெற்கு கொள்ளிடத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ம்தேதி இரவு 8 தூண்களும், 9 மதகுகளும் கொள்ளிடத்தில் வந்த வெள்ளப்பெருக்கினால் உடைந்து விழுந்தது. 1836ம் ஆண்டு வெள்ளையர்களால் கட்டப்பட்ட இந்த தடுப்பணை மிகவும் தொன்மையும், வரலாற்று சிறப்பும்மிக்கது ஆகும். 182 ஆண்டு கடந்த நிலையில் கம்பீரமாக காட்சியளித்த இந்த தடுப்பணை பாலம் திருச்சி-கரூர் சாலையையும் திருச்சி-நாமக்கல் சாலையையும், குறுக்கே இணைக்கும் வகையில் முக்கொம்பில் அமைந்திருந்தது. வெள்ளத்தில் இடிந்து விழுந்த பாலத்தினால் போக்குவரத்தும் பாதித்தது. அதே வேளை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். காவிரியாற்றில் வந்த வெள்ளநீரை தேக்கி வைத்து விவசாயத்திற்கு முழுமையாக வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. காவிரி தாய் ஆக்கோரஷமாக சீறிப்பாய்ந்து கடல் அன்னையுடன் இரண்டற கலந்ததால் விவசாயத்திற்கு உண்டான தண்ணீர் வீணாக போனதை கண்டு விவசாயிகள் ரத்தக்கண்ணீர் வடித்தனர்.

தடுப்பணை உடைந்ததை அடுத்து அப்போதைய கலெக்டர் ராஜாமணி முக்கொம்பில் முகாமிட்டு தடுப்பணையிலிருந்து வெளியேறும் தண்ணீரை அடைக்க இரவு பகலாக அமைச்சர்கள், அதிகாரிகள் துணையோடு பணியாற்றினார். பெரிய, பெரிய பாராங்கற்கள் கொண்டு வந்து கொட்டப்பட்டு மணல் ஆயிரக்கணக்கான லாரிகளில் எடுத்து வந்து கொட்டி ஒரு வழியாக தற்காலிக தடுப்பணை பணி அப்போதைக்கு முடிக்கப்பட்டது. மீண்டும் ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்தால் வழிந்தோடி வீணாகாமல் இருக்க உடைப்பு ஏற்பட்ட இடத்தில் அரை வட்ட வடிவில் 220 மீ. தூரத்திற்கு 12 மீ. நீளமும், 8.5 மீ. அகலமும் உடைய 1,100 இரும்பு தகடுகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு காவிரியாற்றில் பொருத்தப்பட்டது. அதற்கு அருகே 85 ஆயிரம் சதுரஅடி பரப்பிலான தண்ணீர் கசியாத வகையில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதற்காக அரசு 38.45 கோடி செலவிட்டுள்ளது. தற்போது காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட போகிறது என்று பரவிய நிலையில் முக்கொம்பில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுவிடும் என விவசாயிகள் அஞ்சினர். ஆனால், பொறியாளர்கள் நவீன தொழில்நுட்பத்துடன் உடைந்த இடத்தில் தடுப்பணை பணிகளை நேற்றுடன் முடித்துள்ளனர்.

இப்பணிகளுக்கான திட்ட மதிப்பீடு காலம் 28.2.2019 முதல் 6 மாத காலம் என அறிவித்திருந்த நிலையில் பணிகள் தாமதமாக தொடங்கப்பட்டிருந்த சூழலில் நேற்று பணிகள் நிறைவடைந்ததை அடுத்து அலுவலர்கள் நிம்மதியடைந்துள்ளனர். ஆனால் உடைந்த தடுப்பணைக்கு பதிலாக புதியதாக தடுப்பணை கட்டப்படும் என முதல்வர் அறிவித்து சென்றார். அதற்கான அடிக்கலும் நடப்பட்டது. ஆனால் அஸ்திவாரத்தோடு பணி நின்றுவிட்டது. தற்போது மழை காலம் தொடங்க உள்ளதால், காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால், தண்ணீர் வீணாக கடலுக்கு செல்லும், எனவே பணியை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ஆற்றுப்பாசன கோட்ட அலுவலர் ஒருவர் கூறுகையில், காவிரியாற்றில் 4.50 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தாலும் கூட தாங்கும் வகையில் இந்த தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. அதிகளவு தண்ணீர் வந்தால் கொள்ளிடத்திலும், காவிரியிலும் தண்ணீர் திறக்கப்படும். இதனால் தடுப்பணைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மேலும் உடைந்த கதவணையிலிருந்து 75மீ தள்ளி ரூ.387 கோடி மதிப்பில் முதல்வர் உத்தரவின் பேரில் 55 கண்களுடன் கதவணை பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பணிகள் முடிந்த பின்பு ஹைட்ராலிக் மதகுகள் பொருத்தப்படும். மார்ச் 21க்குள் பணிகள் முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. குழாய்களை அடித்து காவிரியாற்றில் இறக்கும் (பைல்ஸ்) பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். மட்டன் பிரியாணி விருந்து: முக்கொம் பில் தடுப்பணை பணிகளுக்காக வியர்வை சிந்தி உழைத்த தொழிலாளர்களை மகிழ்விக்கும் விதமாக கறி பிரியாணி, தால்சா, ஆனியன் பச்சடி, இனிப்பு பாயாசம், ஐஸ்கிரீம், குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது. தொழிலாளர்கள் ஆங்காங்கே அமர்ந்து மகிழ்வுடன் சாப்பிட்டனர்.

Related Stories: