'அவசியமான திட்டம் ... சுற்றுசூழல் அனுமதி கிடைக்க தாமதம் ஆகும்' : மத்திய அரசு முரணான வாததால் 8 வழிச்சாலை திட்டமே குழப்பமாக உள்ளதாக நீதிபதிகள் கருத்து

டெல்லி: 8 வழிச்சாலை திட்டத்தில் சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகே கட்டுமான பணிகளை மேற்கொள்வோம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. உயர்நீதிமன்ற தடையை எதிர்த்து மத்திய நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குநர் தொடர்ந்த இந்த வழக்கில் 8 வழிச்சாலை திட்டத்துக்கு சுற்றுச்சுழல் அனுமதி பெற தாமதமானால் என்ன செய்வீர்கள் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

வழக்கு கடந்து வந்த பாதை :

சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்தால் விவசாயிகள், பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும், பாதுகாக்கப்பட வேண்டிய வனங்கள் அழிக்கப்படுவதாகவும் விவசாயி கிருஷ்ணமூர்த்தி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த ஆர்.சுந்தரராஜன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் பாமக எம்பி அன்புமணியும் மனுதாரராக இணைத்து கொண்டார்.இதையடுத்து மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 8 வழிச்சாலை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த அறிவிப்பு மற்றும் அரசாணை ஆகியவற்றை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து  உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மத்திய அரசு மற்றும் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து சேலம்- சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து ஆகஸ்ட் 7ம் தேதி உச்ச நீதிமன்றமே விசாரிக்கும் என கடந்த 31ம் தேதி உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் என்.வி.ரமணா, அஜய் ரஸ்தோகி மற்றும் சந்தான கவுடர் ஆகியோர் அமர்வில்  விசாரணைக்கு வந்தது.

அப்போது  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் உத்தரவில்,”சேலம்- சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு எந்தவித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மேலும் இந்த வழக்கில் உணர்ச்சிப்படும் அளவிற்கு எதுவும் கிடையாது. இருப்பினும் இது பொதுமக்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால் விரிவாக விசாரிக்க விரும்புகிறோம். அதனால் வழக்கை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவித்த நீதிபதிகள் அன்றைய தினம் இறுதி விசாரணை நடத்தப்படும் என  உத்தரவிட்டனர்.

மத்திய அரசு பதில்

இந்நிலையில் இவ்வழக்கின் இறுதி விசாரணை இன்று தொடங்கியது. சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்ட வரைப்படத்தை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.  அப்போது, 8 வழிச்சாலை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற தாமதம் ஆனால் என்ன செய்வீர்கள்? என மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மத்திய அரசு, சுற்றச்சூழல் அனுமதி இல்லாமல் 8 வழிச்சாலை அமைக்கப்பட மாட்டாது, அந்த திட்டத்தை தொடங்க மாட்டோம், என தெரிவித்தது.

நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதங்கள் பின்வருமாறு :

உச்சநீதிமன்றம் : 8 வழிச்சாலை திட்டத்திற்கு சுற்றுசூழல் அனுமதி பெற தாமதமானால் என்ன செய்வீர்கள் ?

உச்சநீதிமன்றம் : திட்டத்துக்கான நிலத்தை எப்படி தேர்வு செய்வது என்பதை ஏன் முன்கூட்டியே வரையறை செய்யவில்லை.

மத்திய அரசு  : சுற்றுசூழல் அனுமதி இல்லாமல் 8 வழிச்சாலை திட்டத்தை தொடங்க மாட்டோம்

மத்திய அரசு  :8 வழிச்சாலைக்கான முதல் கட்ட ஆய்வு மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

மத்திய அரசு  :8 வழிச்சாலைக்கான நிலத்தை கையகப்படுத்த அனுமதிக்க வேண்டும்.

மத்திய அரசு  :சுற்றுசூழல் அனுமதி என்பது ஒரு நடைமுறையே தவிர நிலம் கையகப்படுத்துவதில் ஒரு பிரச்னை அல்ல.

மத்திய அரசு  : நிலம் கையகப்படுத்திய பிறகு சாலை அமைப்பதற்கே சுற்றுசூழல் அனுமதி தேவை.

மத்திய அரசு  : 8 வழிச்சாலை திட்டம் என்பது வளர்ச்சிக்கு முக்கியமானது.

மத்திய அரசு  : 8 வழிச்சாலை  தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் நிலத்தை கையகப்படுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு.

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து எழுத்துப்பூர்வமாக மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 8 வழிச்சாலையின் சிறப்பு அம்சங்கள் என்ன, அதன் பலன்கள் என்ன என்பது தொடர்பான விவரங்கள் இடம்பெற்றிருந்தன.

நீதிபதிகள் : சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டமே குழப்பமாக உள்ளது

நீதிபதிகள் : அவசியமான திட்டம் என்கிறீர்கள், ஆனால் சுற்றுசூழல் அனுமதிக்கு தாமதம் ஆகும் என்கிறீர்கள்.

நீதிபதிகள் : 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக மத்திய அரசு செப்டம்பர் 4ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தர வேண்டும்.

Related Stories: