சந்திராயன் -3 விண்கலத்தை நிலவுக்கு செலுத்துவது குறித்து இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது : இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

சென்னை : சந்திராயன் 2ன் பயணம் திட்டமிட்டப்படி சிறப்பாக உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூன் 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவி சுற்றுவட்டப்பாதையில் வந்து கொண்டிருந்த விண்கலம் ஜூலை 23-ம் முதல் ஆகஸ்டு 6-ம் தேதி வரை 5 முறை படிப்படியாக நிலை உயர்த்தப்பட்டது. பின்னர் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக புவியீர்ப்பு விசையை விட்டு வெளியே சென்று, நிலவை நோக்கி பயணித்தது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி புவியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து விலகிய, சந்திராயன்-2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்ததாக ISRO தெரிவித்தது.

இதையடுத்து நிலவின் சுற்றுப்பாதையில் நேற்று சந்திராயன்-2ன் திசை மாற்றயமைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ,ஆகஸ்ட் 28, 30 மற்றும் செப்டம்பர் 1-ல் நிலவின் சுற்றுப்பாதையில் சந்திராயன் -2 விண்கலத்தின் திசை 3 முறை மாற்றப்படும். 4 முறை திசையை மாற்றிய பிறகு 100 கி.மீ.., தூரத்தில் கடைசி சுற்றுப்பாதையை சந்திராயன்- 2 அடையும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் சந்திராயன்- 2ல் இருந்து செப்டம்பர் இரண்டாம் தேதி விக்ரம் லேண்டர் பிரிந்து சந்திரனின் மேற்பரப்பில் சுற்றும். பின்னர் விக்ரம் லேண்டரின் சுற்றுப்பாதை இரண்டு முறை மாற்றப்பட்டு அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்படும். பின்னர், செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவில் மெதுவாக தரையிறங்கி, விக்ரம் லேண்டர் ஆய்வை துவங்கும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சந்திராயன் 2 செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை 1.40 மணிக்கு நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் முயற்சியை ஆரம்பிக்கும்

என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் பேசியது குறிப்புகளாக பின்வருமாறு :

*சந்திராயன்- 2 தற்போது நிலவை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது.

*இனி வரும் நாட்களில் நீளவட்டப் பாதை சுற்றுவட்டப்பாதையாக சுருக்கப்படும்.

*சந்திராயன் -2 செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை 1.40 மணிக்கு நிலவில் தரையிறங்கும் முயற்சியை ஆரம்பிக்கும்

*நிலவில் சந்திராயன்- 2 லேண்டர் தரையிறங்கும் போது சந்திராயன் 2ன் வேகம் முற்றிலும் குறைக்கப்பட்டு நிலைநிறுத்தப்படும்.

*இஸ்ரோவில் ஆண்கள் பெண்கள் என்ற வித்தியாசம் கிடையாது, திறமையானவர்களுக்கே முன்னுரிமை

*வரும் காலங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பெண்கள் தலைமை வகிக்க வாய்ப்புகள் உண்டு.

*சந்திராயன் -3 விண்கலத்தை நிலவுக்கு செலுத்துவது குறித்து இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

* சூரியன், செவ்வாய், வியாழன், கோள்களை ஆய்வு செய்ய எதிர்காலத்தில் செயற்கை கோள்கள் அனுப்ப திட்டமிடப்படும்

*சந்திராயன்- 2 நிலவில் தரையிறங்குவதை பார்வையிட மோடிக்கு அழைப்புக்கு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தார்.

Related Stories: