சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் 8 வழிச்சாலையை எதிர்த்து முறையிட வந்த விவசாயிகளை கைது செய்ததற்கு ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: தனது நிர்வாகத் தோல்வியை மறைக்க முதல்வர் எடப்பாடி பகட்டான திட்டங்களை துவக்கி வைப்பதாக ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறுவதாவது; சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் 8 வழிச்சாலையை எதிர்த்து முறையிட வந்த விவசாயிகளை கைது செய்ததற்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தன்னை ஒரு விவசாயி என்று கூறிக் கொள்ளும் முதல்வர் விவசாயிகளை சிறைப்பிடித்தது அராஜகத்தின் அடையாளம்.

முதல்வர் தொடங்கி வைத்துள்ள புதிய திட்டத்தில் எந்த வித சிறப்போ, மக்கள் குறைதீர்க்கும் நல்ல நோக்கமோ இல்லை. முதல்வர் தொடங்கி வைத்துள்ள சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் புதிய மொந்தையில் பழைய கள் என்று ஸ்டாலின் விமர்சனம் செய்தார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஊராட்சியில் இருந்து தலைமை செயலகம் வரை ஊழல் புரையோடி நிர்வாக இயந்திரம் துருப்பிடித்துவிட்டது. முதியோர் உதவித் தொகை மற்றும் பட்டா கோரியும் நீர் ஆதாரங்களை பாதுகாக்கக் கோரியும் மக்கள் அளித்த மனுக்களால் எந்த பயனும் இல்லை.

அரசு நிர்வாக அலங்கோலங்களை சரிசெய்ய முடியாமல் புதிய மாவட்டம், புதிய முகாம்கள் மூலம் மக்கள் கவனத்தை திசை திருப்ப முதல்வர் முயற்சி செய்கிறார். முதல்வரால் முடிந்தால் அரசு அலுவலகங்கள், அமைச்சர்கள் மட்டத்தில் லஞ்சத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிகைகள் பாராட்டுவதற்காக பகட்டான திட்டங்களை துவக்கி வைப்பதால் எந்த பலனும் இல்லை எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: