ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைகளுக்கு அரசியல் காழ்ப்புணர்வே காரணம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைகளுக்கு அரசியல் காழ்ப்புணர்வே காரணம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த டெல்லி உயர்நீதிமன்றம், அவருடைய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா மறுப்பு தெரிவித்தார். மேலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிடுமாறு வலியுறுத்தினார். இதனையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்விடம் ப.சிதம்பரம் சார்பில் முறையிடப்பட்டது. இந்நிலையில் அயோத்தி வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உடனடியாக விசாரிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தது.

இதனிடையே முன் ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் விரைந்தனர். நேற்று 2 முறை, இன்று 2 முறை என மொத்தம் 4 முறை அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் வந்தனர். ஆனால் அவர் இல்லாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதன் தொடர்ச்சியாக ப.சிதம்பரம் மீது அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனத்தை தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து திமுக நடத்தும் போராட்டத்தில் 14 எதிர்க்கட்சிகள் பங்கேற்கவிருப்பதாகவும், டி.ஆர்.பாலு தலைமையில் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார். அப்போது ப.சிதம்பரம் குறித்த கேள்விக்கு பதலளித்த அவர், ப.சிதம்பரம் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அரசியல் காழ்புணர்வோடு இத்தகைய செயல் நடைபெறுவதாக நான் அறிகிறேன். மேலும் ப.சிதம்பரம் சட்ட வல்லுநர் என்பதால் இந்த வழக்கை அவர் சட்டரீதியாகவே எதிர்கொள்வார் எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: