அவசியம்தானா மெடிக்கல் இன்சூரன்ஸ்?

என் வயது 35. நான் தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருகிறேன். எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஒருவருக்கு ஐந்து வயதாகிறது. இன்னொருவருக்கு மூன்று வயதாகிறது. என் நண்பர் ஒருவர் தற்போது மெடிகிளைம் பாலிசி ஒன்றை எடுத்துள்ளார். எனக்கும் என் குடும்பத்திற்கும் அந்த பாலிசியை எடுக்கச் சொல்கிறார். தற்போது நாங்கள் ஆரோக்கியமாகதானே இருக்கிறோம்? இருந்தாலும் மெடிக்கல் பாலிசி எடுப்பது அவசியமா ? இது எடுப்பதால் என்ன பலன். இது எடுப்பதால், அவசர சிகிச்சையின் போது பயன் அடைய முடியுமா ?

விளக்கம் அளியுங்கள்

- சம்மந்தம், மதுராந்தகம்.

“மெடிக்கல் இன்சூரன்ஸ் என்பது தேவைக்காக அல்ல. நம்முடைய பாதுகாப்பிற்காக கண்டிப்பாக ஒவ்வொருவரும் எடுக்க வேண்டியது” என்கிறார் ஸ்டார் ஷெல்த் மெடிக்கல் இன்சுரன்ஸ் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அலுவலர் டாக்டர் பிரகாஷ். “நம் உடலை பாதிக்கும் நோய்களுக்கு பலவிதமான வைத்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எந்த விதமான வைத்தியம் எந்த நோயாளிக்கு தீர்வினை அளிக்கும் என்று டாக்டர்கள் விளக்கம் அளித்தாலும் நோயாளிகள் முதலில் கேட்பது, இதற்கான மருத்துவ செலவு எவ்வளவாகும் என்பதுதான். அப்படியே இருந்தாலும் குறைந்த விலையில் எவ்வாறு மருத்துவ சிகிச்சை பெற முடியும் என்பது அவர்களின் அடுத்த எண்ணமாக உள்ளது. விஞ்ஞானம் பல வகையில் வளர்ந்து இருந்தாலும், எல்லாரும் விலை அதிகமான சிகிச்சை முறைகளை மேற்கொள்ள முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. அதே சமயம் எதிர்பாராத விபத்தோ அல்லது உடல் நிலை சரியில்லாமல் போகும் நேரத்தில் நாம் மற்றவர்களை நாடாமல் இருக்கவே இந்த இன்சூரன்ஸ் திட்டம்.

இந்த திட்டத்தில் நாம் வருடா வருடம் நாம் எடுத்து இருக்கும் இன்சூரன்சுக்கு நிலைத்து இருக்க ஒரு குறிப்பிட்ட பிரீமியம் தொகையை செலுத்த வேண்டும். அத நம்முடைய அவசர மருத்துவ உதவியின் போது கைக்கொடுக்கும். மேலும் நாம் கட்டும் பிரீமியம் தொகைக்கு ஏற்ப மருத்துவ வசதிகளை பெற்றுக் கொள்ளலாம்.மருத்துவ சிகிச்சை முறைகளை பொருத்தவரை வெளிநாட்டில் கிடைக்கும் அதே சிகிச்சைகளும் நம் நாட்டிலும் உள்ளது. மார்பக புற்றுநோய் முதல் இருதய அறுவைசிகிச்சை வரை எல்லா இடங்களிலும் ஒரே சிகிச்சை முறைகள் தான். காரணம் குறிப்பிட்ட நோய்களுக்கு இப்படித்தான் டயக்னைஸ் செய்ய வேண்டும் என்ற வரைமுறைகள் உள்ளன. இந்தியாவை பொருத்தவரை ஒருவரின் சம்பாதிப்பு அதிகமாக தான் உள்ளது. நிறைய பேர் மியுச்சுவல் மற்றும் மற்ற துறைகளில் இன்வெஸ்ட்மென்ட் செய்து வருகிறார்கள். மற்ற துறையில் முதலீடு செய்தால் நமக்கு பணமாக கிடைக்கும். ஆனால் மருத்துவ காப்பீடு எடுத்தால் நமக்கு மருத்துவம் இலவசமாக கிடைக்கும். நோயின் அறிகுறி தெரிந்த பிறகு தான் பலர் மருத்துவ காப்பீடு எடுக்க முனைகிறார்கள். அது தவறானது. காரணம் இது லாபம் சம்பாதிக்க கூடிய இடமில்லை என்பதை எல்லாரும் கவனத்தில் வைத்துக் கொள்வது அவசியம்.

நோய் வந்த பிறகு சிலர் காப்பீடு எடுப்பதை தவிர்க்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பல கொள்கைகளை கடைபிடித்து வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் மருத்துவ செலவுக்கான பணம் உண்மையான தேவை உள்ளவர்களுக்கு போய் சேர வேண்டும் என்பது தான். மேலும் மருத்துவ முதலீடு இருப்பதால், சில மருத்துவமனைகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதையும் கட்டுப்படுத்த இந்த விதிமுறைகள் உதவும். இது சிட் ஃபண்ட் கிடையாது. பணத்தை வாங்கிக் கொண்டு திவாலாகிவிடுவதற்கு. பொதுமக்கள் அவர்களுக்காக செலுத்தும் மருத்துவ காப்பீட்டு தொகையை எந்த காலத்திலும்யாரும் ஏமாற்ற முடியாது. அவர்களுக்கான தொகை அவர்களுக்கானதுதான்.மருத்துவக் காப்பீட்டினை பொதுமக்கள் நன்றாக இருக்கும் போதே எடுக்க வேண்டும். மருத்துவக் காப்பீடு பொறுத்தவரை யார் வேண்டும் என்றாலும் எடுக்கலாம். இதற்கு வயசு ஒரு தடை இல்லை. பிறந்த குழந்தை முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரை யாருக்கும் எடுக்கலாம். மருத்துவக் காப்பீடு எடுக்கும் முன், ஒருவரை முழு ஆய்வு செய்த பிறகு தான் மருத்துவ காப்பீடு அளிக்கப்படும்.

மேலும் அங்கீகாரம் செய்யப்பட்ட மருத்துவமனைகளில் எல்லா வசதிகளும் இருக்கம்படியான சிகிச்சைகளை நாம் பெற்றுக் கொள்ளலாம். நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் பிரச்னை உள்ளவர்களும் மருத்துவ காப்பீடு உண்டு. சிறுநீரகம், லிவர் சிரோசிஸ் மற்றும் புற்றுநோய் பிரச்னை உள்ளவர்களுக்கு காப்பீடு கொடுப்பதில்லை. சில மருத்துவ காப்பீடு நிறுவனம் இருதய பிரச்னை உள்ளவர்களுக்கும் கொடுப்பதில்லை. ஆனால் -எங்கள் நிறுவனம், இருதய பிரச்னை உள்ளவர்கள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் காப்பீடு அளிக்கிறோம். காரணம் புற்றுநோய் பாதிப்பு இருந்தாலும், பலர் சிகிச்சைக்கு பிறகு நலமாக உள்ளனர். அவர்களுக்கு வேறு பிரச்னை வந்தால் அதற்கான மருத்துவ உதவி கிடைப்பதில்லை. அந்த வசதியையும் ஏற்படுத்தித் தந்திருக்கிறோம். இந்த காப்பீடு வசதியினை அவர்கள் சாதாரண ஜுரம் வந்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். மறுபடியும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டாலும் அதற்கான சிகிச்சைக்கு பெற்றுக் கொள்ளலாம்.

தற்போது இரண்டே விஷயங்களுக்கு மருத்துவ காப்பீடு கொடுப்பதில்லை. ஒன்று மனநோயாளிகள் மற்றது பல் சம்மந்தமான பிரச்னைகள். காரணம் காப்பீடு உள்ளது என்பதால், தேவையில்லாமல் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள இதனை பயன்படுத்த செய்வாங்க. பல் சார்ந்த விஷயங்களில் நிறைய நடக்கும். கண் அறுவை சிகிச்சை மற்றும் கேட்ராக்ட் சிகிச்சைக்கு காப்பீடு உண்டு. மருத்துவ காப்பீட்டைப் பொருத்தவரை நம்முடைய வசதிக்கு ஏற்ப அதற்கான கட்டணம் செலுத்தலாம். அதாவது நாம் எடுக்கும் தொகையை முன்னிட்டு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 35 ஆயிரம் வரை பிரிமியம் தொகை மாறுபடும். இதில் நாம் கட்டும் பிரிமியம் தொகைக்கு ஏற்ப அவர்கள் தங்கும் அறையின் வசதிகள் மாறுபடுமே தவிர சிகிச்சை முறையில் எந்த மாற்றமும் ஏற்படாது. சில சமயம் நாம் தங்கும் அறையின் கட்டணம் காப்பீட்டு தொகைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படவில்லை என்றால், அதற்கான கூடுதல் கட்டணத்தை நாம் தனியாக செலுத்திக் கொள்ளலாம். எல்லா நோய்களுக்கும் நிலையான மருத்துவ செலவு இருக்காது. இது மருத்துவமனை மற்றும் நோய்க்கு ஏற்ப மாறுபடும்.

ஒரு சிகிச்சை என்றால் எல்லா மருத்துவமனையிலும் நிலையான விலை வரணும். அந்த மாற்றம் ஏற்பட்டால் எல்லாரும் குறைந்த பிரிமியம் தொகை கட்டுவது மட்டும் இல்லாமல் அவர்களுக்கும் நல்ல வசதியான சிகிச்சையை அளிக்க முடியும். பாலிசியை பொருத்தவரை புளோட்டிங் மற்றும் ஸ்டான்டர்ட் பாலிசி உள்ளது. ஒரு குடும்பத்தில் நான்கு பேர் என்றால் அவர்கள் எல்லாருக்கும் சேர்த்து ஆறு லட்சத்துக்கு பாலிசி எடுத்து இருப்போம். இந்த ஆறு லட்சத்தை குடும்பத்தில் உள்ள நான்கு பேரும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இது புளோட்டிங் பாலிசி. அதுவே ஸ்டான்டர்ட் பாலிசி என்றால், அதே ஆறு லட்சம் குடும்பத்தில் மூன்று பேருக்கு தலா இரண்டாக எடுத்து இருப்போம். அப்படி இருக்கும் பட்சத்தில் ஒருவர் இரண்டு லட்சத்துக்கு மேல்காப்பீடு தொகையை பெற முடியாது. அவர்களுக்கு அதற்கு மேல் செலவு ஏற்பட்டால், அதற்கான தொகையை தனியாக செலுத்த வேண்டும். மேலும் ஒரு வருடம் முழுக்க காப்பீடு தொகையை நாம் எடுக்காமல் இருந்திருந்தால், அதற்கான போனஸ் தொகை உங்களின் காப்பீடு தொகையுடன் சேரும். இதன் மூலம் ஆறு லட்சத்துக்கு காப்பீடு எடுத்து இருந்தால், உங்கள் போனஸ் தொகையும் சேர்ந்து குறிப்பிட்ட வருடங்களில் ஏழு முதல் எட்டு லட்சமமாக மாறி இருக்கும். மேலும் வருடா வருடம் காப்பீட்டினை புதுப்பிக்கும் போது, உங்களின் காப்பீட்டுத் தொகையை உங்களின் வசதிக்கு ஏற்ப அதிகரித்துக் கொள்ளலாம்.

மருத்துவக் காப்பீட்டின் அடுத்த கட்டம் வெல்னெஸ் திட்டம். அதாவது சிகிச்சைக்கு பணம் மட்டும் அளிக்காமல், சிகிச்சைக்கு பிறகு அவர்கள் எப்படி ஆரோக்கியமாக வாழலாம் என்று ஆலோசனையும் வழங்கப்படும். உதாரணத்திற்கு சர்க்கரை நோய் பிரச்னை உள்ளவர்கள் என்றால், அவர்கள் உணவில் எவ்வாறு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும், என்ன உணவுகளை சாப்பிட வேண்டும், உடற்பயிற்சி முறைகள் குறித்த ஆலோசனை வெல்னெஸ் திட்டத்தின் மூலம் வழங்க வேண்டும். நீரிழிவு மட்டும் இல்லை அறுவை சிகிச்சை முதல் எந்த ஒரு மருத்துவ ஆலோசனை வேண்டும் என்றாலும் இதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். மருத்துவ காப்பீட்டு பொருத்தவரை எல்லாரும் ஆரோக்கியமாக இருக்கும் போதே எடுத்துக் கொள்வது அவசியம்’’ என்றார் டாக்டர் பிரகாஷ்.

தொகுப்பு : ப்ரியா

Related Stories: