மைக்ரோசாஃப்ட்டும் நாசாவும் நடத்தப்போகும் வீடியோ பாடம்!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

சர்வதேச தொழில்நுட்ப கல்வியாளர்கள் சமூக மாநாடு 2018-ல் நடந்தது. அப்போது நடந்த சந்திப்பின் விளைவாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கல்விப் பிரிவு மற்றும் நாசா ஆகிய இரு நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக விண்வெளி அறிவியலில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு புதிய வகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘மைக்ரோ கிராவிட்டியிலிருந்து விண்வெளி வீரர்களின் கால்களை பாதுகாக்க சாக்ஸ்களை எப்படி தயாரிப்பது?’ என்ற தலைப்பில் தொடங்கி, 8 தலைப்புகளில் வீடியோ பாடங்களை அறிமுகப்படுத்தியுள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.

மேலும் இந்தப் பாடத்திட்டத்தில் 3D வடிவமைப்பு, விர்ச்சுவல் ரியலிட்டி மற்றும் தகவல் ஆய்வு ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பாடத்திட்டத்தில், அனைத்து தலைப்புகளிலும் 50 நிமிடங்கள் அளவிலான மூன்று அல்லது நான்கு வகுப்புகள் இடம்பெற்றிருக்கும். மேலும் ஒவ்வொரு தலைப்பிலும் வகுப்புகள் 2 முதல் 3 டாலர்கள் (140 ரூபாய் முதல் 210 ரூபாய் ) வரையிலான கட்டணத்தில் கிடைக்கப்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை பற்றிய அறிவை மாணவர்களுக்குக் கற்பிக்கும் வகையிலேயே இந்தப் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் பாடத்திட்டத்தை பயில மாணவர்கள் வின்டோஸ் 10 மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆபிஸின் சந்தாவை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 2018 ஆம் ஆண்டில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பிபிசியுடன் இணைந்து இதே மாதிரியான திட்டத்தை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

Related Stories: