ஆந்திராவில் பெண்களுக்கு அரசு பதவியில் 50% இடஒதுக்கீடு: மசோதா நிறைவேற்றம்

திருமலை: எஸ்சி, எஸ்டி, பிசி, மைனாரிட்டி பிரிவை சேர்ந்த பெண்களுக்கு அரசு பதவிகளில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா ஆந்திர சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.ஆந்திர மாநில சட்டப்பேரவையில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு எஸ்சி, எஸ்டி, பிசி, மைனாரிட்டி பிரிவை சேர்ந்த பெண்களுக்கு நேற்று அரசு சார்பில் நியமிக்கக் கூடிய நாமினேட்டட் பதவி மற்றும் அரசு சார்ந்த ஒப்பந்தப் பணிகளில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை நிறைவேற்றியது.

இதுகுறித்து சட்டப்பேரவையில் மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்குழு தலைவரும் நகரி தொகுதி எம்எல்ஏவுமான நடிகை ரோஜா பேசியதாவது: சரித்திரத்தில் இடம் பெறக்கூடிய வகையில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு முதல் கூட்டத்தொடரிலேயே 50 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி மசோதா நிறைவேற்றியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா ஒவ்வொரு கூட்டத் தொடரின் போதும் கூறப்பட்டு வரும் நிலையில் மசோதா மட்டும் எந்த ஒரு கூட்டத் தொடரிலும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு பதவியேற்ற முதல் கூட்டத்தொடரிலேயே பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி சரித்திரத்தில் இடம்பெறும் மசோதாவை நிறைவேற்றி உள்ளார்.

பெண்களுக்கு வாய்ப்பளித்தால் எந்த ஒரு இடத்திலும் சாதிப்பார்கள் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: