எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே மோட்டார் வாகன திருத்த மசோதா நிறைவேற்றம்: மாநில உரிமையில் தலையிடுவதாக திமுக குற்றச்சாட்டு

புதுடெல்லி: எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்புக்கு இடையே மோட்டார் வாகன திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மாநில உரிமையில் மத்திய அரசு தலையிடுவதாக விவாதத்தின் போது கனிமொழி எம்பி பேசினார்.மோட்டார் வாகன திருத்த மசோதா 2019ஐ மக்களவையில் மத்திய சாலை மற்றும் போக்குவரத்துறை துணை அமைச்சர் நிதின் கட்கரி தாக்கல் செய்தார். இந்த திருத்த மசோதாவில் பல்வேறு விதிமுறைகள் கடுமையானதாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. குறிப்பாக சீட் பெல்ட் அணியாமல் காரை ஓட்டினால் தற்போது வசூலிக்கப்படும் அபராதம் ₹100 என்பது ₹1000 ஆக உயர்த்தப்படுகிறது. ெஹல்மெட் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டினால் வசூலிக்கப்படும் அபராதமும் ₹100ல் இருந்து ₹1000 ஆக உயர்த்தப்படுவதுடன் 3 மாதங்கள் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்.

ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனத்தை ஓட்டினால் ₹5,000 அபாராதமும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் விதிக்கப்படும் ₹2000 அபராத தொகை ₹10,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், வாகனங்களை ரேசில் ஈடுபடுத்துதல் போன்ற விதிமீறல்களுக்கு ₹5000 வரை அபாராதம் விதிக்கப்படும். இதுபோன்ற கடுமையான விதிமுறைகள் இருப்பதால் திமுக, திரிணாமுல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்து வருகின்றன.நேற்று இந்த மசோதா மீது விவாதம் நடைபெற்றது. இதில் திமுக எம்பி கனிமொழி கலந்துகொண்டு பேசியதாவது: கடல்வழி, வான்வெளி, ரயில் போன்ற  போக்குவரத்து மத்திய அரசிடம் உள்ள நிலையில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சாலை போக்குவரத்தையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிக்கிறது. இதன் மூலம் மாநிலங்கள் உரிமையில் மத்திய அரசு தலையிடுகிறது.

வாகன ஓட்டுனர்கள் உரிமம் பெற கல்வித்தகுதி கட்டாயமில்லை என மத்திய அரசு அறிவித்திருப்பது எழுத்தறிவின்மையை ஊக்குவிப்பதாக உள்ளது. எனவே இந்த விதியை நீக்கவேண்டும். நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்த பல்வேறு பரிந்துரைகள் இந்த மசோதாவில் இடம்பெறவில்லை. தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம் லாபநோக்கின்றி கிராம மக்களுக்கு சேவை செய்து வரும் நிலையில் போக்குவரத்து துறையை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் விதிமுறைகள் இந்த மசோதாவில் உள்ளது. இதை அகற்றவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

விவாதத்தின் பங்கேற்று திரிணாமுல் காங்கிரசின் சவுகதா ராய் பேசுகையில், `போக்குவரத்து துறையில் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிக்க கூடாது’ என்றார்.இதையடுத்து மக்களவையில் மோட்டார் வாகன திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

Related Stories: