ஓட்டு வீடுகளை இழந்த அனைவருக்கும் இழப்பீடு: கஜா புயல் பாதிப்பு நிவாரணத்தில் கொள்கை முடிவெடுக்க வேண்டும்: அரசு அறிக்கையை ஏற்க மறுத்து: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

மதுரை: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கறம்பயம் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கடந்த 15.11.2018ல் ஏற்பட்ட கஜா புயலால் எனது ஓட்டு வீடு முழுமையாக பாதித்தது. ஆய்வு செய்த அதிகாரிகள், என் வீடு முழுமையாக சேதமடைந்ததை உறுதி செய்தனர். ஆனால், பல மாதங்களாகியும் எனக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்கவில்லை. வீட்டை இழந்த எனக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், ‘‘கஜா புயலால் ஓட்டு வீட்டை முழுமையாக இழந்தோருக்கும், போதுமான நிவாரணம் கிடைத்திடும் வகையிலான கொள்கை முடிவை தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் துறை மேற்கொள்ள வேண்டும். ஓட்டு வீட்டை இழந்தோருக்கு உடனடியாக இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்து மாவட்ட கலெக்டர் முடிவெடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், மனுதாரருக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக கூறி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, ‘‘ஓட்டு வீடு முழுமையாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்க கொள்கை முடிவெடுக்க வேண்டுமென தான் உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றி மீண்டும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை ஆக. 1க்கு தள்ளி வைத்தார்.

Related Stories: