வேலூர் மக்களவை தேர்தலில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு தபால் வாக்கு கிடையாது

வேலூர்: வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடத்தை விதிமுறைகள் மற்றும் தேர்தல் செலவினங்கள் குறித்த விளக்க கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் பேசியதாவது:

வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர், ஜாதி, மத, இன வேறுபாடுகள் குறித்து பிரசாரம் செய்யக்கூடாது. உணர்ச்சியை தூண்டும் வகையில் வேண்டுகோளையும் விடுக்கக்கூடாது. வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்களை பிரசார மேடையாக பயன்படுத்தக்கூடாது. அரசு இடங்கள், கட்டிடங்களில் சுவரொட்டி, விளம்பரங்கள் செய்யக்கூடாது. 179 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு 3 கட்ட பாதுகாப்பு ேபாடப்பட்டுள்ளது. சிவிஜில் ஆப் மூலம் புகார்களை தெரிவிக்கலாம். புகாரின் மீது அரை மணி நேரத்தில் வழக்குப்பதிவு செய்யப்படும். மேலும் வேட்பாளர்கள் பிரசாரம் மேற்கொள்ள 89 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனுமதி இல்லாத வாகனங்களில் பிரசாரம் செய்தால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

வாக்குப்பதிவில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தபால் வாக்கு அளிக்கப்படாது. அதற்கு மாற்றாக பணிபுரியும் இடத்திலேயே வாக்களிக்க அனுமதி சீட்டு வழங்கப்படும். அதை பயன்படுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணிபுரியும் வாக்குப்பதிவு மையத்திலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம். வேலூர் மக்களவை தொகுதியில் உள்ள 1034 போலீசாருக்கு மட்டுமே தபால் வாக்குகள் உண்டு. ராணுவத்தில் பணியாற்றும் 6088 பேருக்கு ஆன்லைன் மூலம் வாக்குப்படிவம் நேற்று அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இதனிடையே வேலூர், ஆம்பூரில் துணை ராணுவத்தினர், போலீசார் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர்.5ம் தேதி விடுமுறை: தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலையொட்டி ஆகஸ்ட் 5ம் தேதி அந்த தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

Related Stories: