உயர் நீதிமன்றம் உத்தரவை மீறி வரதட்சணை, பரிசுப் பொருட்கள் வாங்கினால் கடும் நடவடிக்கை: போலீசாருக்கு தமிழக டிஜிபி திரிபாதி எச்சரிக்கை

சென்னை: உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி காவல் துறையின் பணியாற்றும் போலீசார் யாரும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் வரதட்சணை மற்றும் பரிசுப் பொருட்கள் எதையும் வாங்க கூடாது. அதையும் மீறி வாங்கினால் அது லஞ்சமாக கருதப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபி திரிபாதி போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.தமிழக டிஜிபி திரிபாதி, உயர் போலீஸ் அதிகாரிகள், மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள், மாவட்ட எஸ்பிக்கள் ஆகியோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

காவல் துறையில் பணியாற்றும் போலீசார் காவல் துறை 1963 விதிகளின்படி, யாரும் வரதட்சணை, பரிசுப் பொருள் உள்ளிட்டவைகள் வாங்க கூடாது. அதன்படி தமிழக காவல் துறையில் பணிபுரிபவர்கள் திருமணம், திருமன நாள், மதம் சார்ந்த விழாக்கள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகளில் சொந்த நண்பர்களிடமிருந்து ₹200 க்கு குறைவான மதிப்புள்ள பரிசு பொருட்களை மட்டுமே அன்பளிப்பாக பெற வேண்டும்.  நடைமுறையில் உள்ள சட்ட விதிகளின் படியே இந்த பரிசை பெற வேண்டும். பூங்கொத்துகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் அன்பளிப்பாக பெறக் கூடாது.

காவல் துறை டிஜிபி மற்றும் காவல் துறையில் உள்ள உயர் அதிகாரிகளின் முன்அனுமதி   இல்லாமல் காவல் அதிகாரி ஒருவர் பரிசுபொருட்கள் பெற்றது உறுதி செய்யப்பட்டால்,  சம்பந்தப்பட்ட போலீருக்கு காவல் துறை டிஜிபி எடுக்கும் முடிவு தான் இறுதி முடிவாக இருக்கும்.எந்த காவல் துறை அதிகாரியும், தனி ஒருவர், நிறுவனம் ஆகியவற்றுடன் எந்த பரிவர்த்தனையிலும் ஈடுபடக் கூடாது. எந்த வித பொருட்கள், வாகனங்கள், பர்னிச்சர்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட எதையும் வாங்க கூடாது. இதை மீறி காவல் துறை அதிகாரி இந்த பொருட்களை வாங்கினால் அது லஞ்சமாக கருதப்படும். எந்த காவல் துறை அதிகாரியும் வரதட்சணை வாங்கவோ மற்றும் கொடுக்கவோ கூடாது. பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் நேரடியாக அல்லது மறைமுகமாக ஏதாவது கேட்டால் அது வரதட்சணையாக கருதப்படும். அனைத்து குழு அதிகாரிகள் இது தொடர்பாக தங்களுக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் டிஜிபி தெரிவித்துள்ளார்.

Related Stories: