வேலூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள் பிரசாரம்

சென்னை: வேலூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில், வேண்டுமென்றே உள்நோக்கத்துடன், தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

ரத்து செய்யப்பட்ட வேலூர் தொகுதிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ம் நாள் நடைபெற உள்ளது. தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பேராதரவுடன், திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த்தை வெற்றி பெறச் செய்திட உரிய அனைத்து முயற்சிகளையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டுள்ளது. தேர்தல் நடைபெறும் வேலூர் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டு, திமுக மற்றும் தோழமை கட்சி தோழர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க உள்ளனர்.

கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, வரும் 30ம்தேதி மாலை ஆம்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார். மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வரும் 31ம்தேதி மாலை, வேலூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன் வரும் 1ம்தேதி மாலை வாணியம்பாடியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். நான், வரும் 26ம்தேதி மாலை 4 மணி முதல் மேல்பட்டி, பேரணாம்பட்டு, குடியாத்தம், மெத்தேரி மற்றும் கே.வி.குப்பம் ஆகிய பகுதிகளில் வேன் மூலம் பிரசாரம் செய்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: