பிராந்திய மொழிகளில் நடைபெறும் என்று கூறப்படவில்லை தேர்வை ரத்து செய்ததற்கான நிர்வாக காரணம் என்ன?

*மொழி அறிவு போதும்; பிராந்திய மொழியில் தேர்வு நடத்துவது குறிப்பிடவில்லை

* தபால் துறைக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: தபால் துறை தேர்வு அறிவிப்பாணைகளை திரும்ப பெற்றதற்கான நிர்வாக காரணங்களை உரிய ஆவணங்களுடன் பதில் மனுவாக தாக்கல் செய்யுமாறு தபால் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தபால் துறையில் தபால்காரர், உதவியாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்காக ஜூலை 14ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடத்தப்படும் என்ற அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து திமுக மாணவரணி செயலாளரும், காஞ்சிபுரம் எம்.எல்.ஏவுமான எழிலரசன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஜூலை 18ல் விசாரணைக்கு வந்தபோது, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும், தமிழிலும் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் அறிவித்திருப்பதாக தபால் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த அறிவிப்பு இந்த தேர்வுக்கு மட்டுமா அல்லது வரும்காலத்தில் நடக்கும் தேர்வுகளுக்கும் சேர்த்தா? என்று மத்திய அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணை வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜரானார். தபால்துறை சார்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் ஆஜராகி இரண்டு ஆவணங்களை தாக்கல் செய்தார்.அவற்றில், மே 10ம் தேதியிட்ட அறிவிப்பாணையில் தபால்துறை தேர்வில் இரண்டாம் தாள் அறிமுகப்படுத்தப்படுவதாகவும், அது பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என்றும் விண்ணப்பதாரரின் தகுதிகளில் ஒன்றாக பிராந்திய மொழியறிவு பெற்றிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததுஆனால் ஜூலை 11ம் தேதியிட்ட அறிவிப்பாணையில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த இரண்டு அறிவிப்புகளும் திரும்ப பெறப்பட்டுவிட்டன.

அதனால் தற்போதை நிலையில் ஆட்சேர்ப்புக்கான எந்த நடைமுறையும் நிலுவையில் இல்லை.நிர்வாக காரணங்களுக்காக அறிவுப்பாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி நடத்தப்படும் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் நடைமுறை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை படித்துப்பார்த்த நீதிபதிகள், “ மே மாத அறிவிப்பாணையில் பிராந்திய மொழியறிவு இருக்க வேண்டுமென்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்று குறிப்பிடப்படவில்லை.

இந்த நிலையில், அறிவிப்பாணைகளை திரும்ப பெறுவதற்கு நிர்வாக காரணம் தான் என்று மத்திய அரசு கூறுவதை ஏற்கமுடியாது. எனவே, தேர்வை ரத்து செய்ததற்கான நிர்வாக காரணங்கள் என்ன என்பதை ஆகஸ்ட் 5ம் தேதி உரிய ஆவணங்களுடன் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.

அதேபோல, தமிழ் மொழியும்  தேர்வு மொழியாக இருக்கும் என்ற அறிவிப்பு இந்த ஆண்டுக்கு மட்டுமா அல்லது எதிர்வரும் ஆண்டுகளுக்குமா என்று கடந்த முறை எழுப்பிய கேள்விக்கும் பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: