வாழ்வதற்கு வழி கேட்டால் செத்த பிறகு குடும்ப சேமநல நிதி உயர்த்தி தருவோம் என்பதா?: ரேஷன் கடை ஊழியர்கள் கடும் கண்டனம்: காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு

சென்னை: சம்பள உயர்வு அளித்து வாழ்வதற்கு   வழி கேட்டால் இறந்தால் குடும்ப சேமநல நிதியை உயர்த்துகிறோம் என்று அறிவிப்பதா என ரேஷன் கடை ஊழியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடை பணியாளர்கள் சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக போராடி வருகிறார்கள். இதுகுறித்து துறை சார்ந்த அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் பல்வேறு தொழிற்சங்கங்களும் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு ஒரு குழுவை அமைத்தது. குழு அதிகாரியும், ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் நியாயமானது என்றும், அவர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கும் பரிந்துரையை அரசுக்கு அளித்தார்.

அதன் அடிப்படையில், சட்டமன்ற கூட்டத்தொடரில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் என தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 50 ஆயிரம் பணியாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கூட்டுறவு துறையில் பணியாற்ற கூடிய நியாயவிலை கடை பணியாளர்களின் முக்கிய கோரிக்கையான சம்பள உயர்வு பற்றி எதுவும் அறிவிக்காமல் அரசு கண்துடைப்புக்காக சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அறிவித்துள்ளது. இதனால் ரேஷன் கடை பணியாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு நியாய விலை கடை மாநில தலைவர் ஜி.ராஜேந்திரன் கூறியதாவது:சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து போராட்டம் அறிவித்தோம். ஆனால் தமிழக அரசு, சம்பள உயர்வு அளித்து நாங்கள் வாழ்வதற்கு வழிகேட்டால் பணியில் இருக்கும்போது இறந்தால் குடும்ப சேமநல நிதி ₹2 லட்சத்தில் இருந்து ₹3 லட்சமாக உயர்த்துகிறோம் என்று அறிவிக்கிறார்கள். பல்வேறு துறைகளை சார்ந்த பணியாளர்களுக்கு சட்டமன்றத்தில் ஊதிய உயர்வு வழங்கிய நிலையில் கூட்டுறவு துறையில் தனக்கு கீழ் பணியாற்றி வரும் பணியாளர்களின் மன நிலையையும் கோரிக்கைகளின் முக்கியத்துவத்தையும் தொழிற்சங்கங்கள் மற்றும் கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் வாயிலாக எடுத்துரைத்தும் உணராத அமைச்சரை நாம் பெற்றது நமது சாபக்கேடு என்று கருத வேண்டும்.

கூட்டுறவு துறையில் ஏற்கனவே இருக்கும் திட்டங்களை 110வது விதியின் கீழ் முதல்வர் அறிவித்துள்ளார். இதை பார்க்கும்போது கூட்டுறவு துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள், இந்த துறை ஊழியர்களின் கோரிக்கைகளை அரசிடம் எவ்வாறு எடுத்து வைத்திருப்பார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.எனவே தமிழகம் முழுவதும் நியாய விலை கடையில் பணியாற்றக்கூடிய பணியாளர்கள் அனைவரும் துறை சம்பந்தமான கோரிக்கைகளை முன்வைத்து தான் போராடுகிறோம் என்பதை கருத்தில் கொண்டு, அனைவரும் ஒற்றுமையாக போராட முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இதை தொடர்ந்து, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த ரேஷன் கடை ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கான அறிவிப்பை விரைவில் அனைத்து சங்கங்களும் இணைந்து வெளியிட உள்ளது.

Related Stories: