போலீஸ் அனுமதி பெற்றால்தான் வடமாநில தொழிலாளருக்கு வீடு: பெருந்துறை போலீசார் அதிரடி நிபந்தனை

பெருந்துறை: போலீஸ் அனுமதி பெற்ற பிறகே வடமாநில தொழிலாளர்களுக்கு வாடகைக்கு வீடு வழங்க வேண்டும் என்று பெருந்துறை போலீசார் எச்சரித்துள்ளனர்.ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் பற்றி கணக்கெடுப்பு மற்றும் குற்ற பின்னணி பற்றிய தகவலுக்காக  விதிமுறைகளை அமல்படுத்துவது பற்றிய ஆலோசனை கூட்டம் பெருந்துறையில் நடந்தது.கூட்டத்தில் பெருந்துறை டிஎஸ்பி ராஜகுமார் பேசியதாவது:

 பெருந்துறையில் உள்ள சிப்காட் மற்றும் நூற்றுக்கணக்கான விசைத்தறி நெசவு தொழில், பனியன் கம்ெபனிகள், நூல் மில்கள் ஆகியவற்றில் 50 ஆயிரம் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர், வடமாநிலங்களில் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுவிட்டு போலீஸ் நடவடிக்கையில் இருந்து தப்பி இந்த பகுதிக்கு வந்துள்ளனர். அவர்களை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்து வருகின்றனர்.

அதிக வாடகைக்கு ஆசைப்படும் வீட்டு உரிமையாளர்கள், அவர்கள் பற்றி முழு விபரங்களையும் பெறாமல் தங்கள் வீடுகளிலோ கொட்டகைகளிலோ வாடகைக்கு அனுமதிக்கின்றனர். நாளடைவில் சில தொழிலாளர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டு தப்பும்போது குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, வடமாநில தொழிலாளர்கள் பற்றி அடையாள ஆவணங்களை வாங்கி போலீசாரிடம் அளித்து  அனுமதி பெற்ற பிறகே பணிக்கு அமர்த்த வேண்டும். வீடுகளை வாடகைக்கு விடுவோரும் போலீசாரின் அனுமதி பெற்ற பிறகே வாடகைக்கு விடவேண்டும். இந்த அறிவிப்பை மீறுபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு டிஎஸ்பி ராஜகுமார் பேசினார்.

Related Stories: