அம்பத்தூர் பஸ் நிலையத்தில் திறந்தவெளியில் உயரழுத்த மின்வடம்: விபத்து பீதியில் பயணிகள்

அம்பத்தூர்: அம்பத்தூர் பஸ் நிலையத்தில் உயரழுத்த மின்வடம் திறந்தவெளியில் அமைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் விபத்து பீதியில் வந்து செல்கின்றனர். சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் அம்பத்தூர் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு தினமும் 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அம்பத்தூர் சுற்றியுள்ள 70க்கும் மேற்பட்ட நகர்களை சேர்ந்த மக்கள் இந்த பஸ் நிலையத்தை  பயன்படுத்தி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், இந்த பஸ் நிலையத்தில் உள்ள மின் பெட்டியில் இருந்து உயரழுத்த மின்வடம் ஒன்று திறந்த நிலையில், பாதுகாப்பற்ற முறையில் ஒரு கடைக்கு கொண்டு செல்லப்படுகிறது. பூமிக்கடியில் புதைத்து கொண்டு செல்ல வேண்டிய இந்த மின்வடம், திறந்தவெளியில் ஆபத்தான முறையில் கொண்டு செல்லப்படுகிறது. இந்த மின்வடம் அருகே ஓட்டல், டிபன், மருந்து, ஸ்வீட் உள்ளிட்ட கடைகள் உள்ளதால், இங்கு வருபவர்கள் இந்த மின் வடத்தை தாண்டி வர வேண்டிய நிலை உள்ளது.

மேலும், இருசக்கர ஓட்டிகள் இந்த மின்வடம் மீது ஏற்றி செல்வதால், சேதமடையும் வாய்ப்பு உள்ளது. அப்போது, ஏதேனும் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்து பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து  ஏற்படும் அபாயம் உள்ளது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாகவே உள்ளனர். இதனால், தினசரி பஸ் நிலையம் வரும் பயணிகள் அச்சப்படுகின்றனர். தற்போது, அடிக்கடி மழை பெய்வதால், மின்கசிவு அபாயமும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  அம்பத்தூர் பஸ் நிலையத்தில் உள்ள மின்வடத்தை பூமிக்கு அடியில் புதைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: