அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: அரசு தொடர்ந்த பல்வேறு அவதூறு வழக்கில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கு விசாரணை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த 2016ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது, துணைவேந்தர் நியமனத்தில் 15 கோடி ரூபாயை அப்போதைய  ஆளுநர் பெறுவதாகவும், அதில் ரூ.10 கோடியை அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா பெறுவதாகவும் கூறியதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் தமிழக அரசு சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதேபோல் 2012ம் ஆண்டு மத்திய அரசு முறையாக நிதி ஒதுக்கியும் தமிழக அரசு திட்டங்களை செயல்படுத்த முட்டுக்கட்டையாக இருக்கிறது என்று கூறியதாகவும், 2019ம் ஆண்டு முக்கொம்பில் தடுப்பணை உடைந்தது தொடர்பாக தமிழக அரசை விமர்சித்தது தொடர்பாகவும் அரசு சார்பில் அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் சென்னை, எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி சாந்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேரில் ஆஜராகியிருந்தார். அவரிடம் வழக்கு குறித்த ஆவணங்கள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 29ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Related Stories: