ஆப்கன், தீவிரவாதம் குறித்து டிரம்ப்-இம்ரான் ஆலோசனை

வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஆப்கன் மற்றும் தீவிரவாத சவால்கள் உள்ளிட்டவை  குறித்து அந்நாட்டு அதிபர் டிரம்புடன் ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வெள்ளை மாளிகையில் அவர் அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசினார். கடந்த 2015ம் ஆண்டுக்கு பின்னர் அமெரிக்கா-பாகிஸ்தான் இடையே நடைபெறும் முதல் பேச்சுவார்த்தை இதுவாகும். பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தந்து உதவுவதாக அமெரிக்கா கடந்த ஆண்டு குற்றம்சாட்டியது. இதனைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவியையும் அமெரிக்கா நிறுத்திக்கொண்டது. இதன் காரணமாக இருநாட்டுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் - அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு ஆசியாவில் அமைதி, ஸ்திரத்தன்மையை கொண்டு வருவதில் இரு நாடுகளும் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. வர்த்தக ஒப்பந்தங்களை விரிவுபடுத்துதல், ராணுவ உறவுகளை வலுப்படுத்துவது உட்பட இருதரப்பு உறவின் அனைத்து அம்சங்களையும் இரு நாடுகளும் புதுப்பிக்கும் என்று அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு தீவிரவாதத்தால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் மற்றும் ஆப்கன் விவகாரத்தில் சுமூகமான தீர்வு காண்பதற்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பு அளிப்பது குறித்தும் இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். ஆப்கன் பிரச்னையில் அமைதியான முறையில் தீர்வு காண்பதற்காக பாகிஸ்தான் தொடங்கியுள்ள நடவடிக்கைகளை டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார். பாகிஸ்தான் வருமாறு, இம்ரான் கான் விடுத்த அழைப்பை அதிபர் டிரம்ப் ஏற்றுக் கொண்டார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தானுக்கு நிறுத்தப்பட்ட நிதியை மீண்டும் வழங்குவதுீபற்றிய  எந்த தகவலையும் அமெரிக்கா வெளியிடவில்லை.

Related Stories: