மிதுன் 91, முஷ்பிகுர் 50 பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசம் வெற்றி

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணியுடனான பயிற்சி ஒருநாள் போட்டியில், வங்கதேசம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி கொழும்புவில் நாளை மறுநாள் பகல்/இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. இப்போட்டிக்கு பயிற்சி பெறும் வகையில், இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணியுடன் நேற்று பயிற்சி ஆட்டத்தில் மோதியது.கொழும்பு, பி.சரவணமுத்து ஓவல் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இலங்கை லெவன் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 282 ரன் குவித்தது. தனுஷ்கா குணதிலகா 26, பானுகா ராஜபக்ச 32, ஷெஹன் ஜெயசூரியா 56, வனிந்து ஹசரங்கா டிசில்வா 28 ரன் எடுத்தனர். 7வது வீரராகக் களமிறங்கிய தசுன் ஷனகா 86 ரன் (63 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்), அமிலா அபான்சோ 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

வங்கதேச பந்துவீச்சில் ருபெல் உசேன், சவும்யா சர்கார் தலா 2 விக்கெட், தஸ்கின், முஸ்டாபிசுர், பர்கத் ரெஸா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 48.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 285 ரன் எடுத்து வென்றது. தொடக்க வீரர்கள் கேப்டன் தமிம் இக்பால் 37, சர்கார் 13 ரன்னில் ஆட்டமிழந்தனர். முகமது மிதுன் - முஷ்பிகுர் ரகிம் ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 73 ரன் சேர்த்தது.முஷ்பிகுர் 50 ரன் (46 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். இதையடுத்து முகமது மிதுன் - மகமதுல்லா ஜோடி 4வது விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது. மகமதுல்லா 33 ரன் எடுத்து வெளியேற, சிறப்பாக விளையாடிய மிதுன் 91 ரன் (100 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி விக்கெட்டை பறிகொடுத்தார்.வங்கதேச அணி 48.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 285 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. சப்பிர் ரகுமான் 31 ரன், மொசாடெக் உசேன் 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை லெவன் பந்துவீச்சில் லாகிரு குமாரா 2, ரஜிதா, அகிலா தனஞ்ஜெயா, ஹசரங்கா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

Related Stories: