நாடாளுமன்றத்தில் பட்ஜெட் நிறைவேறியது

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் கடந்த 5ம் தேதி 2019-20ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில், பெட்ரோல், டீசலுக்கான வரி ரூ.2 உயர்த்தப்பட்டது. தங்கம் உள்ளிட்ட உயர் மதிப்பு ஆபரணங்கள் இறக்குமதிக்கான கலால் வரி உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, பட்ஜெட்டை நிறைவேற்றுவதற்கான நிதி  மசோதா (எண் 2) மற்றும் நிதி ஒதுக்கீடு மசோதா (எண் 2) ஆகியவை மக்களவையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இவ்விரு மசோதாக்களையும் மாநிலங்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். காஷ்மீர் விவகாரத்தால் ஒட்டுமொத்த எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்திருந்த நிலையில், இரு மசோதாக்கள் மீதான விவாதங்களுக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார்.

அப்போது, பெட்ரோல், டீசல் வரி உயர்வை நியாயப்படுத்திய அவர், வரி பரிந்துரைகளின் நோக்கமே, சமமான வளர்ச்சியை கொண்டு வருதே என்றார். இதைத் தொடர்ந்து இரு மசோதாக்களும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி அமைத்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. ‘3 குழந்தைக்கு மேல் இருந்தால் தேர்தலில் போட்டியிட தடை’: மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா குறித்து மக்களவையில் நேற்று நடந்த விவாதத்தின்போது, பாஜ கூட்டணி கட்சியான ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி எம்பி ஹனுமன் பெனிவால் பேசுகையில், ‘‘சாலை விபத்துகள் அதிகரிக்க முக்கிய காரணம் பெருகிவரும் மக்கள் தொகைதான். எனவே அதை தடுக்க எம்பி, எம்எல்ஏக்களிடமிருந்து நடவடிக்கையை தொடங்க வேண்டும். 3க்கும் மேற்பட்ட குழந்தை பெற்ற

வர்கள் தேர்தலில் போட்டியிட தடை கொண்டு வர வேண்டும்’’ என்றார்.

நியூஸ்பிரின்ட்டுக்கான வரி உயர்வை நீக்க மறுப்பு

செய்தித்தாள்களை அச்சடிக்கும் காகிதங்களான நியூஸ் பிரின்ட்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதுபோல், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நியூஸ் பிரின்ட்களுக்கு 10 சதவீத கலால் வரி விதிக்கப்படுமென பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதனால் பத்திரிகை நிறுவனங்களுக்கு கடும் நிதிச்சுமை ஏற்படும் என பல்வேறு கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி இருந்தனர். இது தொடர்பாக நேற்று விளக்கமளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘உள்நாட்டு உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டிலேயே போதுமான நியூஸ் பிரின்ட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், வெளிநாட்டிலிருந்து பெரும்பாலும் நியூஸ் பிரின்ட்கள் இறக்குமதி செய்யப்படுவதால் அவற்றின் விலை சரிந்து வருகிறது. இதனால் வெளிநாட்டு நிறுவனங்களுடன் உள்ளூர் உற்பத்தியாளர்கள் போட்டி போட முடியாத நிலை ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டே இறக்குமதி நியூஸ் பிரின்ட்டுகளுக்கு வரி உயர்த்தப்படுகிறது. இதை திரும்பப் பெற முடியாது’’ என்றார்.

Related Stories: