எதிர்பார்த்த அளவிற்கு ஆட்டம் இல்லை: அடுத்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி வேறு மாதரியாக இருக்கும்: அமெரிக்காவில் இம்ரான் கான் பேச்சு

வாஷிங்டன்: அடுத்த உலகக் கோப்பையில் நீங்கள் பார்க்கும் பாகிஸ்தான் அணி வேறு மாதரியாக இருக்கும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு கூட  தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்தியா அணிக்கு எதிரான மிகப் பெரிய தோல்விக்கு பின் பாகிஸ்தான் அணி பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20  தொடர்களை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் அணியில் அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்த முடிவெடுத்துள்ளனர். ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு தனித்தனி கேப்டனை நியமிக்க முடிவு எடுத்துள்ளனர். மேலும் டி20  உலகக் கோப்பை தொடருக்கு தயராக அந்த அணி மற்ற தொடர்களில் பங்கேற்பதை குறைத்து கொண்டு டி20 போட்டிகளில் அதிக கவனம் செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசுமுறை பயணமாக அமெரிக்க சென்றுள்ளார். அமெரிக்காவில் வாழும் பாகிஸ்தானியர்கள் மத்தியில் உரையாற்றிய இம்ரான் கான், “உலகக் கோப்பை தொடர் தற்போது முடிவடைந்துள்ளது.  எதிர்பார்த்த அளவிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆட்டம் இல்லை. பாகிஸ்தான் அணியை மாற்றி அமைக்க உள்ளேன். எனது வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், அடுத்த உலகக் கோப்பையில் நீங்கள் பார்க்கும்  பாகிஸ்தான் அணி வேறு மாதரியாக இருக்கும். பாகிஸ்தான் அணியை வேற லெவலுக்கு கொண்டு செல்வேன். பாகிஸ்தான் அணியின் முழுதிறமையும் வெளி கொண்டு வர உள்ளோம்“ என்றார்.

இம்ரான் கான் வருகையை எதிர்த்து போராட்டம்:

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வருகையை எதிர்த்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் போராட்டங்கள் நடைபெற்றன.அமெரிக்காவில் பல மாகாணங்களில் இருந்தும் போராட்டக்காரர்கள் ஒன்றிணைந்து வாஷிங்டன் டி.சி.,க்கு வந்து  தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். முத்தஹிதா கவாமி இயக்கம், சிறுபான்மையினர் இயக்கங்கள் உள்ளிட்டவை இந்த போராட்டத்தில் பங்கேற்றன. பாகிஸ்தான் ராணுவத்துக்கு இனியும் பிளாங் செக் கிடையாது என்றும்,  பாகிஸ்தானில் சிறுபான்மையினர்கள் மீதான அடக்குமுறையை நிறுத்தக் கோரியும் அவர்கள் பதாகைகளை ஏந்தினர். பாகிஸ்தான் ஊடகங்கள் மீதான கட்டுப்பாட்டையும் நீக்க அவர்கள் வலியுறுத்தினர். மேலும், பாகிஸ்தானுக்கு எந்த  நிதியுதவியோ, ஆதரவோ வழங்கக் கூடாது என்பதை தங்கள் போராட்டம் வாயிலாக அமெரிக்க அதிபரிடம் கோரிக்கை வைப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

Related Stories: