மின்சார கார் மீதான வரியை குறைக்க இந்த வாரம் முடிவு

புதுடெல்லி: மின்சார கார்கள் மீதான வரியை குறைப்பது தொடர்பாக இந்த வாரம் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான வாகனங்கள் பெட்ரோல், டீசலில்தான் இயங்குகின்றன. இதனால் எரிபொருள் தேவை அதிகரிக்கிறது. இதற்காக கச்சா எண்ணெயை அதிகமாக இறக்குமதி செய்யவேண்டி உள்ளது. அதோடு, இந்த வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசு அதிகமாகிறது. எனவே, பெட்ரோல், டீசலுக்கு மாற்றாகவும், சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டும் மின்சாரத்தில் இயங்கும் பேட்டரி வாகன உற்பத்தியை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ஆனால் இவற்றுக்கான உற்பத்தி செலவு அதிகம் என்பதோடு, பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான மையங்கள் பெரும்பாலான இடங்களில் இல்லவே இல்லை. இதனால் மின்சார வாகனங்களை வாங்க யாரும் முன்வருவதில்லை.இருப்பினும், நிதி ஆயோக் அதிகாரிகள் மற்றும் சாலை போக்குவரத்து, எரிசக்தி, ஸ்டீல் துறை அமைச்சகங்கள் இடையே கடந்த மே 28ம் தேதி நடந்த ஆலோசனை கூட்டத்தில் 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வணிக பயன்பாட்டுக்கு விற்கப்படும் புதிய வாகனங்கள் கண்டிப்பாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களாகத்தான் இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆனால், மின்சார வாகனங்கள் விலை அதிகம் என்பதால் இவற்றின் விற்பனையை அதிகரிக்க வரியை குறைக்க வேண்டும் என வாகன உற்பத்தி நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி தற்போது 12 சதவீதமாக உள்ளது. இதை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது உற்பத்தியாளர்களின் கோரிக்கை. இதுபோல், சோலார் பேனல்கள், லாட்டரி சீட்டுகள் மீதான வரியையும் மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக வரும் 25ம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: