போலீஸ் சேனல்: உனக்கு பாதி, எனக்கு மீதி...: கொட்டுது கரன்சி மழை

கோவை மாநகர எல்லைக்குள் உள்ள 140க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளிலும், கடையை ஒட்டியுள்ள ‘’பார்’’களிலும் மாமூல் வசூலிப்பது தொடர் கதையாக நடந்து வருகிறது. டாஸ்மாக் அதிகாரிகள், அந்தந்த காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆய்வாளர்கள், ஆளும்கட்சியினர் என தனித்தனியாக வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். சமீப காலமாக, மாநகர போலீசார் நேரடியாக வசூல் களத்தில் இறங்குவது இல்லை. அதற்கு பதிலாக, ஆளும்கட்சி தொழிற்சங்கத்தை சேர்ந்த இரண்டு பேரை புரோக்கர்களாக நியமித்துள்ளனர். அவர்கள் கடைகள்தோறும் ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என வசூல் தட்டி எடுக்கின்றனர்.

‘’அரசு நிர்ணயித்த நேரத்தைவிட கூடுதல் நேரம் ஒதுக்கி, சரக்கு வித்துக்கோ... ‘’பார்’’களில் 24 மணி நேரமும் சரக்கு வித்துக்கோ...’’ என போலீஸ் அறிவுரைப்படி, ரூட் போட்டுக்கொடுக்கின்றனர். வசூல் வேட்டையில் சரிபாதியை இவர்கள் அமுக்கிவிட்டு, மீதமுள்ளவற்றை காவல்துறையிடம் ஒப்படைக்கின்றனர். இதை, அந்தந்த காவல் எல்லைக்கு உட்பட்ட ஆய்வாளர்கள் சப்தம் இல்லாமல் பங்கிட்டுக்கொள்கின்றனர். இதில், காந்திபுரம்தான் டாப். ஒவ்வொரு மாதமும் பல லட்சம் குவிவதால், மாநகர காவல்துறையில் ஒரே கரன்சி மழைதான்.

* காக்கி சட்டையை போட மறுக்கும் எஸ்எஸ்ஐ:

வேலூர் மாவட்டத்தில் எஸ்பியாக ராஜசேகர் இருந்தபோது அங்கு தனிப்பிரிவில் பணியாற்றிய யோகமானவர் மீது பணியிட மாறுதலுக்காக பணம் வாங்கினார் என்ற புகாருக்காக திருப்பத்தூர் டிஎஸ்பி ஆபீசுக்கு ரைட்டராக மாற்றப்பட்டார். அப்போது முதல் 15 ஆண்டுகளாக தொடர்ந்து அங்கேயே கோலோச்சி, எல்லோரையும் கலங்கடித்தவரை ஏலகிரிக்கு போகுமாறு டிஐஜி உத்தரவிட்டார். இந்த விஷயம் திருப்பத்தூர் சப்-டிவிஷனை சேர்ந்த இன்ஸ்பெக்டர் தொடங்கி 2ம் நிலை காவலர் வரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஆனால் ஏலகிரிக்கு சென்றவர் அங்கு போய் காக்கி சீருடையை போடமாட்டேன் என்று அடம் பிடித்ததுடன் ஒரே நாளில் மலையில் இருந்து கீழே இறங்கியவர் ஜோலார்பேட்டை ஸ்டேஷனுக்கு போய் அங்கு ஏற்கனவே இன்ஸ்பெக்டர் ரைட்டராக இருக்கும் பெண்ணிடம் நான்தான் இங்கு ரைட்டர். என்னை யாரும் எதுவும் கேட்க முடியாது என்று சீருடை அணியாமலேயே பணி செய்து வருகிறாராம். அதிகாரிகளை மதிக்காமல் சதிராட்டம் ஆடும் இவரை என்னதான் செய்வது என்று திருப்பத்தூர் டிஎஸ்பி தொடங்கி இன்ஸ்பெக்டர் வரை புலம்பி தீர்க்கிறார்களாம்.

* அதிகாரி வந்தார்... விடுப்பில் சென்றார்:

மக்களவை தேர்தலை முன்னிட்டு நெல்லை மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனராக இருந்த அதிகாரி மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக சென்னையில் பணியாற்றிய அதிகாரி நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனராக பொறுப்பேற்றார். ஆனால் பொறுப்பேற்ற சில நாளில் விடுப்பில் சென்றுவிட்டார். நெல்லையின் முக்கிய விழாவான நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்திற்கு கூட அவர் பணிக்கு வரவில்லை. பொதுவாக சென்னையில் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் வந்த சில நாட்களில் மீண்டும் சென்னைக்கு பணியிட மாற்றம் பெற்றுச் சென்று விடுகின்றனர். தற்போது பொறுப்பேற்ற அதிகாரியும் குற்றப்பிரிவில் பணியாற்றுவதற்கு விருப்பமில்லாமல் விடுப்பில் சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

* கெத்து காட்டும் காக்கி குடும்பம்...!

திருப்பூர் மாநகர காவலர்களுக்கான குடியிருப்பு, திருப்பூர் வடக்கு காவல் எல்லைக்குள் உள்ளது. இங்கு, சுமார் 70 வீடுகள் உள்ளன. இங்குள்ள ஒரு போக்குவரத்து ஆய்வாளர் குடும்பம் தொடர்ந்து கெத்து காட்டி வருகிறது. மாமூல்தாரர்கள் நேரடியாக வீட்டுக்கே வந்து மாமூல்தொகையை கொடுத்துவிட வேண்டும் என கறாராக உள்ளது இந்த குடும்பம். ரோட்டோர தள்ளுவண்டி முதல் ஷாப்பிங் மால் வரை மாமூல் கறந்துவிடுகிறார்கள். யாரேனும் மாமூல் தர மறுத்தால், போக்குவரத்துக்கு இடையூறு, அனுமதியின்றி கடை நடத்துதல் என பல வகைகளில் அவர்கள் மீது வழக்கு பாய்ந்து விடுகிறது.

இதனால், பயந்துபோன தள்ளுவண்டி கடைக்காரர்கள் முதல், அனைத்து தரப்பினரும் மாதம்தோறும் மாமூல் கட்டிவிடுகின்றனர். கடந்த மாதம் மாமூல் கொடுக்காத சாலையோர வியாபாரிகள் 4 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அவர்கள் சிறைக்கே சென்றுவிட்டார்கள். காவலர் குடியிருப்பில் அத்துமீறி நுழைந்து, பொருட்களை கொள்ளையடிக்க முயன்றதாக அவர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டதுதான் இதில் ஹைலைட்.

* ‘காட்டு கத்தல் கத்துகிறேன்’ புலம்பும் உதவி கமிஷனர்:

மலைக்கோட்டை மாநகரில் உள்ள நான்கு ரேஞ்ச்களிலும் உள்ள உதவி கமிஷனர்கள் தினமும் மாலை தங்களுக்குட்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முதல் செக்‌ஷன் ஏட்டு மற்றும் முதல் நிலை கிரேடு போலீஸ் வரையிலான அனைவரும் மைக்கில் தேவையான குறிப்புகள், வழக்கு பதிந்ததில் செய்ய வேண்டிய பணிகள், வாகன சோதனை உள்ளிட்டவைகள் குறித்து பேசுவது வழக்கம். இவற்றை எல்லாம் கூறும் போது ஒவ்வொரு காவல் நிலைய செக்‌ஷன் போலீஸ் முதல் இன்ஸ்பெக்டர் வரை குறிப்பு எடுத்து கொள்ள வேண்டும், எடுத்த குறிப்புகளை மீண்டும் செல்போனில் உதவி கமிஷனருக்கு கூற வேண்டும்.

இப்படி ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பகுதி உதவி கமிஷனர் ஒரு நாள் மாலை நேரம் மைக்கில் கட்டளைகளை பிறப்பித்து கொண்டிருந்தார். அவர் கூறும் கட்டளைகளை யாரும் குறிப்பெடுத்து கொள்ளவில்லை என்பதை அறி்ந்த உதவி கமிஷனர் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, நான் கூறுவதை யாரும் நோட் பண்ணவில்லை, ரிசிவ் பண்ணிவிட்டேன், தகவல் அளிக்கிறேன் என மட்டுமே பதில் வருகிறது. அனைவரும் அசலாட்டாக பணியில் உள்ளீர்கள், நான் காட்டு கத்தலாக கத்துகிறேன், யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை என நொந்து கொண்டு பேசினார். மறுமுனையில் இவரின் மெசேஜை ரிசிவ்டு செய்யும் போலீசார் சும்மா தொனதொன என பேசுகிறார், அவரவருக்கு வேற வேலை இல்லையா என கூறி கிண்டலடிப்பது வேடிக்கையாக உள்ளது.

* லஞ்சத்துக்கும் ‘டிஸ்கவுண்ட்’

ஒரு காலத்தில் மதுவிலக்கு பிரிவு என்றாலே போட்டி போட்டு போலீசார் டிரான்ஸ்பர் வாங்கிச் செல்வர். அந்த அளவுக்கு மதுவிலக்கு பிரிவில் பண மழை கொட்டும். டாஸ்மாக் மதுக்கடைகள் அரசு வசமான பிறகு மதுவிலக்கு பிரிவை தேடுவார் இல்லை. ஆனாலும் சமீப காலமாக டாஸ்மாக் மதுக்கடைகளில் மது பாட்டில்களை கூடுதல் விலை வைத்து விற்கப்படுவதால் போலீசாரும் பங்கு கேட்கின்றனர். அதற்கு மாதம் ஒரு தொகையை ஒதுக்க வேண்டியுள்ளது என்கின்றனர் டாஸ்மாக் ஊழியர்கள். இதில் நெல்லை மதுவிலக்கு பிரிவு போலீசார் டிஸ்கவுண்ட் தருகின்றனர் என்பது தான் ஹைலைட். நெல்லை மாநகரத்தில் 85 டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் ஓட்டல் பார்கள் உள்ளன.

டாஸ்மாக் கடைகளில் குவார்ட்டருக்கு 5 ரூபாய் என்ற அடிப்படையில் கூடுதல் விலை வைத்து விற்கப்படுகிறது. இது தவிர பார்களில் தின்பண்டங்கள் விலையும் அவர்கள் வைத்தது தான் ரேட். இதனால் பார்களிலும் பணம் கொட்டுகிறது. இதை கணக்கெடுத்து அல்வா ஊரின் மதுவிலக்கு போலீசார் மாதம் தோறும் ஒவ்வொரு பாரிலும் தவணைக்கு ரூ.2 ஆயிரம் என 3 தவணையாக மாதம் ₹6 ஆயிரம் வசூல் மழை பொழிகின்றனர். ஒரே தவணையில் வழங்கினால் ஆயிரம் ரூபாய் டிஸ்கவுண்ட் தருகின்றனர். இந்த யுக்தியை பயன்படுத்தி பல கடைகளும், பார்களும் மொத்தமாக ரூ.5 ஆயிரத்தை கப்பம் கட்டி விடுகின்றனர். மதுவிலக்கு போலீசாரின் யுக்திக்கு மவுசு பெருகியுள்ளது.

Related Stories: