பறி போகிறதா பாரம்பரிய மீன்பிடி உரிமை ?

கடல் வள பாதுகாப்பு என கூறிக்கொண்டு மத்திய அரசு, மன்னார் வளைகுடா தீவுகளுக்கு செல்ல தடை விதிப்பதால், ராமநாதபுரம் மாவட்டம் உள்பட தமிழக கடலோர பகுதிகளில் வசிக்கும் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 50 ஆயிரம் மீனவர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. பாசி சேகரிப்பு தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 3,700 உயிரினங்கள்: இலங்கைக்கும் - இந்தியாவிற்கும் இடையிலுள்ள மன்னார் வளைகுடாவில் பாம்பன் - தூத்துக்குடி இடையே உள்ள மன்னார் வளைகுடா தீவுகளில் 3,700க்கும் மேற்பட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள், கடல் தாவரங்கள் உள்ளன. தீவுகளில் தங்கி... மன்னார் வளைகுடா கடலோர பகுதியிலுள்ள மீனவ கிராமங்களில், பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வரும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாரம்பரிய மீனவர் குடும்பங்கள், இத்தீவுகளை சுற்றியுள்ள கடல் பகுதியில் காலம்காலமாக மீன்பிடித்து வாழ்ந்து வருகின்றனர். இயந்திரப்படகு வருவதற்கு முன்பே கட்டுமரம், சிறிய மரப்படகு, பாய்மரப்படகில் மீன்பிடி தொழில் செய்து வந்த மீனவர்கள், தங்களது அன்றாட வாழ்வாதாரத்தை இக்கடல் பகுதியில் பெற்று வந்தனர். கடலும் இயற்கை வளம் குன்றாமல் செழிப்பாக இருந்ததால் முத்துக்கள், வெண்சங்குகள் அதிகளவில் இங்கு விளைந்தது. மீனவர்களும் இத்தீவுகளில் பல நாட்கள் தங்கி மீன் பிடித்து, வெயிலில் உலர்த்தி கருவாடாக கரைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர்,  முத்து, சங்கு குளித்தல் தொழிலும் நடந்து வந்தது.

குடிசைக்குள் முடங்கி... 1970களில் இயந்திர படகுகள் வந்ததும் இந்நிலை மாறியது. தற்போது இக்கடல் பகுதியில் பெரிய அளவில் இயந்திரப்படகுகள் மீன்பிடித்தொழில் செய்து வரும் நிலையிலும், கடல் வளம் அழியாத இயற்கையான மீன் பிடிப்பில் மட்டுமே மன்னார் வளைகுடா கரையோர மீனவர்கள் இன்றுவரை ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இவர்களின் வாழ்க்கை இன்றும் சிறிய குடிசைக்குள்ளேயே அடங்கியுள்ளது. பொருளாதாரத்திலும், கல்வியிலும் மிகவும் பின்தங்கிய நிலையில், எவ்வித மேம்பாடும் அடையாமல், 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அதே நிலையில் வாழ்ந்து வருகின்றனர். தற்போது மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின பாதுகாப்பு துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் தீவுகளையொட்டி கடலில் மீன் பிடிக்கும் உரிமையை இழந்து அன்றாட வாழ்வாதாரமும் பறிபோகும் அபாயகரமான சூழலுக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

வந்தது தடை... தமிழகத்தின் தாமிரபரணி ஆறும், இலங்கையின் மல்வத்து ஆறும் கலக்கும் மன்னார் வளைகுடாவில் உள்ள தீவுகளில் பல தீவுகள் தனியாருக்கு சொந்தமானதாக இருந்தன. மத்திய அரசு 1986ல் இத்தீவுகளை தேசிய கடல் வாழ் உயிரினப்பூங்காவாக அறிவித்தது. 1989ல் இத்தீவுகளை சுற்றியுள்ள 10 கிமீ கடல் பகுதியும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. அரிய வகை உயிரினங்களின் வாழிடமாக விளங்கி வரும் இப்பகுதியை பாதுகாக்க வனத்துறை அதிகாரிகள் அரசால் நியமிக்கப்பட்டனர்.  மன்னார் வளைகுடா தீவுகளும், தீவைச்சுற்றியுள்ள கடல் பகுதியும் இவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததை தொடர்ந்து மீனவர்கள் தீவிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

பாசி சேகரிப்பும் பாதிப்பு... தீவுகளை சுற்றியுள்ள கடல் பகுதிக்குள் சிறிய படகில் சென்று மீன் பிடிக்கவும், கடல் பாசி சேகரிக்கவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் கடல் வளம் அழியாமல் காலம் காலமாக மீன் பிடித்த, கடற்பாசி சேகரித்து வந்த பாரம்பரிய மீனவர்கள் மற்றும் மீனவப்பெண்கள் தங்களது அன்றாட வாழ்வாதாரத்தை பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டது. வனத்துறை அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையினாலும் மீனவர்கள், மீனவப்பெண்கள் பல வழிகளில் பாதிக்கப்படுகின்றனர். மீனவர்கள் தரப்பில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டதை தொடர்ந்து கெடுபிடிகள் கொஞ்சம் தளர்ந்தன. திடீரென சில வாரங்களுக்கு முன்பு, தீவுகளை சுற்றியுள்ள பகுதியில் கடலில் எல்லை காட்டும் வகையில் மிதவை போட்டு முழுமையாக தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றியுள்ளனர். இந்த நடவடிக்கையினால் மீனவர்கள் தீவுகளுக்கு அருகில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், பாசி சேகரிக்கும் பணிக்கு பெண்கள் செல்ல முடியாத நிலையும் உருவாகியுள்ளது.

உரிமை மீட்பு போராட்டம்: காலங்காலமாக தீவுகளுக்கு சென்று நாள் கணக்கில் தங்கி மீன் பிடித்து திரும்பிய நிலை போய், தற்போது தீவுக்கு அருகில் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மன்னார் வளைகுடா கரையோர பகுதி மீனவர்கள், தங்களது பாரம்பரிய உரிமையை மீட்டெடுப்பதற்காக அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மன்னார் வளைகுடா கடலில் ஒரு சில மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலையினால் மீன் பிடிப்பது, பிளாஸ்டிக் உள்ளிட்ட ரசாயனக்கழிவுகள் கடலில் கலப்பது போன்ற பல்வேறு காரணிகளால் கடல் வளம் வேகமாக பாதிக்கப்பட்டு வருகிறது. கடல் முத்து விளைச்சலும், சங்கு உற்பத்தியும் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டன. கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்து கரை ஒதுங்குவதும், பவளப்பாறைகள் அழிந்து வருவதும் மேற்கண்ட காரணங்களால்தான் என கடல் வாழ் ஆராய்ச்சியாளர்களும் அடிக்கடி கூறி வருகின்றனர்.

மீனவர்கள் மீது புகார்: கடல் வளத்தை பாதுகாக்க மத்திய அரசும் அவ்வப்போது கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஆனால், கடல்வாழ் உயிரினங்களின் உயிரிழப்பையோ, கடல் மாசுபடுவதையோ முழுமையாக தடுக்க முடியவில்லை. உண்மை காரணங்களை புறக்கணித்து தீவுகளுக்கு, மீனவர்கள் செல்வதால்தான் கடல் வளமும், மீன்வளமும் அழிவதாக கூறி, வனத்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு எதிரான இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அரசு மீது குற்றச்சாட்டு: கடல் வாழ் உயிரினங்களையும் பாதுகாக்கிறோம் எனக்கூறி தங்களின் பாரம்பரிய உரிமையையும், வாழ்வாதாரத்தையும் பறிக்கும் செயலில் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு அரசும் துணை போவதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இங்கேயும் அடிதான்... இலங்கையிலும் அடிதான்...

கடல்வாழ் உயிரின தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்ட பிறகு, 21 தீவுகளை உள்ளடக்கிய மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்லவும், தீவையொட்டி கடலில் மீன் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் மீனவர்கள் வனத்துறையின் நடவடிக்கைக்கு உள்ளாகின்றனர். இலங்கையில் கச்சத்தீவு விஷயத்திலும் சரி... தமிழகத்தில் மன்னார் வளைகுடா தீவுகளிலும் சரி.. மீனவர்களின் பிரச்னை ஒன்றுதான். முதல் அறிவிப்பில் இருந்த உரிமைகள் அடுத்த அறிவிப்பில் பறி போயுள்ளது. கச்சத்தீவு கடல் பகுதியில் நடப்பது போன்றே இங்கேயும் படகுகளை பிடித்து செல்வது, வலைகளை அறுப்பது, மீனவர்களை தாக்கி வழக்கு போடுவது, அபராதம் விதிப்பது போன்ற செயல்கள் அரங்கேறுகின்றன. அங்கு இலங்கை கடற்படையினர், இங்கு மன்னார் வளைகுடா வனஉயிரின காப்பக அதிகாரிகள். அவ்வளவுதான் வித்தியாசம்.

உரிமைப் போராட்டம்

1974ல் நடந்த இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. அப்போது தமிழக மீனவர்கள் எப்போதும் போல் கச்சத்தீவில் தங்கி அக்கடல் பகுதியில் மீன் பிடிக்கவும், மீன், வலைகளை உலர வைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. பின்னர் 1976ல் இருநாட்டு அரசுகளுக்கிடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, தமிழக மீனவர்கள் கச்சத்தீவு கடல் பகுதியில் மீன் பிடிக்கவும், தீவில் தங்குவதற்கும் இருந்த உரிமை ரத்து செய்யப்பட்டது. தொன்றுத்தொட்டு கச்சத்தீவில் தங்களுக்கு இருந்த பாரம்பரிய உரிமை பறிக்கப்பட்டதால், பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் தமிழக மீனவர்கள் தங்களது உரிமையை மீட்டெடுக்க இன்று வரை போராடி வருகின்றனர்.

‘உயிரே போனாலும் இங்கேயே இருப்போம்’

பாம்பன் சின்னப்பாலம் மீனவப்பெண் முத்துப்பேச்சி (70) கூறுகையில், ‘‘12 வயது முதல் கடலில் மீன் பிடிப்பது, பாசி சேகரிப்பது என்று தீவுகளை நம்பித்தான் இப்போது வரை வாழ்ந்து வருகிறோம். தீவில் இருக்கும்போது கிடுகு முடையும் வேலையும் பார்ப்போம். இப்போ மீன்பிடிக்க, பாசி எடுக்க, சங்கு, சோவி சேகரிக்கக்கூட அதிகாரிகள் தடுக்குறாங்க... எங்களுக்கு வேறு தொழில் தெரியாது. அதிகாரிகள் தீவுகளுக்கு வரக்கூடாது என்று சொல்கின்றனர். நாங்கள் எல்லோரும் எங்கு போய் என்ன தொழில் செய்வது? காலம்காலமாய் தீவுகளில் வாழ்ந்து வந்த எங்களை, பெண்கள் என்று கூட பார்க்காமல் அதிகாரிகள் மோசமாக பேசுகின்றனர். அரசு அதிகாரிகள் எங்களை ஏமாற்றி இங்கிருந்து வெளியேற்ற பார்க்கிறார்கள். எங்கள் உயிரே போனாலும் நாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம்’’ என்கிறார்.

பலியாகும் உயிரினங்கள்; பெருகி வரும் கடத்தல்கள்

பாம்பன் தெற்குவாடி மீனவர் முத்துவேல் (67) கூறியதாவது: 10 வயது முதல் மீன்பிடித்தொழில் செய்ய பழகி இன்று வரை மீன் பிடித்து வருகிறேன். அப்போது குருசடை, பூமரிச்சான், பல்லிதீவு, மணலித்தீவு, முயல் தீவுகளில், கூடாரம் அமைத்து மாதக்கணக்கில் தங்கியிருப்போம். மீன்கள் கெட்டு விடும் என்பதால் பிடிக்கும் மீன்களை காய வைத்து, வாரத்திற்கு ஒருமுறை துடுப்பு படகில் பாம்பன் வந்து கருவாடை விற்று கிடைக்கும் பணத்தில் அரிசி, மளிகை சாமான்களை கொண்டு மீண்டும் தீவுகளுக்கு சென்று விடுவோம். தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் கூட தீவில்தான் இருப்போம். மழைக்காலம் துவங்கினால் பாம்பனுக்கு திரும்பி விடுவோம். இப்படித்தான் எங்களது வாழ்க்கை சென்றது. இப்போது தீவுகளுக்கு நாங்கள் செல்லக்கூடாது என்று அதிகாரிகள் தடுக்கின்றனர். அப்போது தீவுகளில் அதிகளவில் தென்னை, பனை, புளி, இலந்தை, கொடுக்காப்புளி மரங்கள் இருந்தன. இப்போது தீவுகளில் பெரிய அளவில் மரங்கள் இல்லை. பாதுகாப்பு மண்டலமாக அறிவிப்பு செய்த பின்தான், அதிகளவில் கடல் ஆமை, திமிங்கலம், டால்பின், கடல் பசு போன்றவை இறந்து கரை ஒதுங்குகின்றன. வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் கடத்தல் நபர்கள் தங்கி செல்வது, கடத்தல் பொருட்களை மறைத்து வைப்பது போன்ற செயல்கள் தீவுகளில் நடக்கிறது.

Related Stories: