கல்வி மானிய கோரிக்கையில் அறிவிப்பு எதுவும் இல்லாததால் பகுதிநேர ஆசிரியர்கள் ஏமாற்றம்

தமிழக சட்டமன்றத்தில் கல்வி மானிய கோரிக்கையில் எந்த அறிவிப்பும் இல்லாததால் பகுதிநேர ஆசிரியர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். சட்டமன்றத்தில் நேற்று முன்தினம் கல்வி துறையின் மானிய கோரிக்கை நடைபெற்றது. இந்த மானிய கோரிக்கையின்போது பகுதிய நேர ஆசிரியர் களின் கோரிக்கை குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததுபோல் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த பட்ஜெட்டில் பகுதிநேர ஆசிரியர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தர அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்த்தோம். எதையும் அறிவிக்கவில்லை. கல்வி மானியக் கோரிக்கையிலாவது அறிவிப்பார்களா என எதிர்பார்த்தோம், இப்போதும் எதையும் அறிவிக்கவில்லை. இது எங்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. இருப்பினும் இதே கூட்டத்தொடரிலே முதல்வரின் 110விதி அறிவிப்பிலாவது மனிதநேயத்துடன் 12 ஆயிரம் பேர் குடும்பநலன் கருதி ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தர அறிவிப்பை அரசு வெளியிட தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மீண்டும் வேண்டுகோள் வைக்கிறது.

9 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் பகுதிநேரமாக பல்வகை சிறப்பாசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் 2011-12ம் கல்வி ஆண்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கல்வி இணைச்செயல்பாடுகளை 6, 7 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி பாடங்களில் பயிற்சி அளிக்க 16 ஆயிரத்து 549 சிறப்பாசிரியர்கள் பகுதிநேரமாக நியமிக்கப்பட்டார்கள். இவர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.5 ஆயிரம் ஆரம்பத்தில் தரப்பட்டது. ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்யக்கோரி வலியுறுத்தி வந்தார்கள். சட்டமன்றத்திலும் சட்டமன்ற உறுப்பினர்கள் மானியக் கோரிக்கையின்போது பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர்.

இதை தொடர்ந்து 2014ல் ஜெயலலிதாவால் அதிகபட்சமாக 40 சதவீதம் ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வால் சம்பளம் ரூ.7 ஆயிரமானதோடு மட்டுமில்லாமல் ரூ.12 ஆயிரம் நிலுவைத்தொகையும் கிடைத்தது. இதன் பின்னர் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கைகளை தொடர்ந்து சட்டமன்றத்திற்குள்ளும், வெளியிலும் பலவழிகளில் வலியுறுத்தினர். இந்நிலையில் 2017ம் ஆண்டு ஆகஸ்டு 22ல் ஜாக்டோஜியோ கூட்டமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்திற்கு சிலநாட்களுக்கு முன்பாக 10 சதவீத ஊதிய உயர்வாக எழுநூறு ரூபாய் ஆகஸ்டு மாதத்தில் இருந்து வழங்க குறிப்பாணை பிறப்பித்தனர்.

இதனால் தொகுப்பூதியம் ரூ.7 ஆயிரத்து 700 ஆனது. ஆனால் அனைத்து தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் 20 சதவீத ஊதிய உயர்வும், ஏப்ரல் முதல் கணக்கிட்டு நிலுவைத் தொகையும் வழங்கி பகுதிநேர ஆசிரியர்களை பாரபட்சமாக நடத்திவிட்டனர். ஜாக்டோஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது பள்ளிகளை திறந்து பகுதிநேர ஆசிரியர்களை பயன்படுத்தி முழுநேரமும் நடத்திட அரசு உத்தரவிடுகிறது. அரசின் உத்தரவின்படி ஜாக்டோஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்த போராட்ட காலங்களில் பகுதிநேர ஆசிரியர்களே பள்ளிகளை திறந்து முழுநேரமும் நடத்திவருகின்றனர். 8 வருஷம் முடிந்து இப்போது 9வது வருஷம் ஆரம்பித்துவிட்டது. தொகுப்பூதியத்தை உயர்த்தி இருக்கலாம், சிறப்பு காலமுறை வழங்கி இருக்கலாம், காலமுறை ஊதியம் வழங்கி இருக்கலாம், ஆனால் இவற்றில் எதுவும் செய்யாமல் 7வது ஊதியக்குழுவின் 30 சதவீத சம்பள உயர்வைகூட நடைமுறைப்படுத்தாமல் இக்குறைந்த தொகுப்பூதியத்திலே நீண்டகாலமாக காலத்தை கடத்துவது எந்த வகையில் நியாயம்?.இனியும் தொகுப்பூதியத்தை அதிகபட்சமாக ரூ.15ஆயிரம் வழங்காமல் இருப்பது எதிர்காலத்தை பாதிக்கின்றது.

பணிநிரந்தரம் செய்ய காலதாமதம் ஆகும் எனில் அதுவரை குறைந்தபட்சம் ரூ.15ஆயிரம் சம்பளத்தை வழங்கும் அறிவிப்பைகூட கல்வி மானியக் கோரிக்கையில் வெளியிடாதது பகுதிநேர ஆசிரியர்களின் மத்தியில் பெருத்த ஏமாற்றமாகிவிட்டது. எனவே இனியும் தாமதிக்காமல் இதே கூட்டத்தொடரில் முதல்வரின் 110விதியிலாவது பகுதிநேர ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு, பணிநிரந்தர அறிவிப்பை வெளியிட தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: