துப்பாக்கிசூட்டால் பாதிக்கப்பட்டவர்களை சமாதானப்படுத்தவே ஆலையை மூடினோம்: வேதாந்தா நிறுவனம் பதில் மனு தாக்கல்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட வழக்கில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த பதில் மனு மீது ஸ்டர்லைட் மீண்டும் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், துப்பாக்கிசூட்டால் பாதிக்கப்பட்டவர்களை சமாதானப்படுத்தவே ஆலையை மூடினோம் என வேதாந்தா நிறுவனம் மனுவில் குறிப்பிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சிவஞானம் தலைமையிலான அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலை மூடிய பிறகு தூத்துக்குடியில் மாசு குறைந்துள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

வேதாந்தா நிறுவனம் பதில் மனு:

இந்த நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த பதில் மனு மீது இன்று வேதாந்தா நிறுவனம் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், ஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியாக எந்த குற்றச்சாட்டும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சரியாக தாக்கல் செய்யவில்லை என்றும் கூறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச உருக்கு ஆலைகளுக்கு இணையாக தூத்துக்குடி நகரில் சுற்றுசூழல் மேம்பாட்டுக்கு 500 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக வேதாந்தா நிறுவன தொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், 2015-16, 2017-18 ஆகிய ஆண்டுகளில் ஆலையை இயக்குவதற்கான ஒப்புதலை புதுப்பித்த அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் செயல்பாட்டாளர்களின் நெருக்கடிக்கு பணிந்து 2018-19ம் ஆண்டிற்கான ஒப்புதலை வழங்க மறுத்து ஆலையை மூட உத்தரவிட்டுள்ளதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு நடந்த துப்பாக்கிசூடு சம்பவத்திற்கு மக்களை சமாதான படுத்துவதற்காகத்தான் ஆலையை நிரந்தரமாக மூடி அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

இதுதவிர, 2011ம் ஆண்டு நீரி நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பில்லை என்றும், ஆலையை சுற்றிய 35 கிராமங்களில் உள்ள மக்களுக்கு ஸ்டெர்லைட் சார்பில் இலவச பரிசோதனை வழங்கப்பட்டு வருவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளது. அதேபோல, ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகு காற்று மற்றும் தண்ணீர் மாசு குறைந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்றும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த பதில் மனு தவறானது என்று வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த பதில் மனுவில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: