2017-19ல் படித்து முடித்த மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

சென்னை: 2017-18, 2018-19ல் படித்து முடித்த மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 11,12ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் மடிக்கணினிகளை தமிழக அரசு தொடர்ந்து வழங்கி வருவதாக கூறினார். புதிய கல்விக்கொள்கையில் தமிழக அரசின் கருத்தை 2 தினங்களுக்குள்ளாக பிரதமருக்கு, முதல்வர் கடிதம் மூலமாக தெரிவிப்பார் எனக் கூறினார். மேலும், இதுவரை ரூ.102 கோடி தனியார் பங்களிப்பாக வழங்கப்பட்டுள்ளது. அதைக்கொண்டு, புதிய கட்டிடங்கள், கழிப்பிட வசதிகள், சுற்றுசுவர்கள், ஆய்வுக்கூடங்கள் என பல்வேறு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன என தெரிவித்தார். மேலும், அனைத்து பள்ளிகளிலும் கழிப்பிட வசதி, சுற்றுச்சுவர் ஆகியவை உள்ளதா என ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும், அவ்வாறு இல்லாத பள்ளிகள் எத்தனை உள்ளன என்பது குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

குறைந்தது ஒரு 6 மாத காலத்திற்கு பிறகு அனைத்து பள்ளிகளிலும் கழிவறை மற்றும் சுற்றுசூழல் வசதிகள் செய்து தரப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் 1ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் சில புதிய மாற்றங்கள் செய்யப்பட்டது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இந்த முறை ஒரே நேரத்தில் 8 வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பொது சிறு சிறு தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது என்றும், மேலும் அந்த தவறுகளை சுட்டிக்காட்டும் போது அடுத்த ஆண்டு இது தொடராது என்று இணையதளத்தில் வெளியிடவுள்ளதாக தெரிவித்தார். தற்போது, இந்த வருடத்திற்கான புத்தகங்கள் அச்சிடப்பட்ட பிறகு எவ்வாறு மாற்ற செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார். இதையடுத்து, பாடப்புத்தகத்தில் தேசிய கீதத்தை தவறுதலாக அச்சிடப்பட்ட விவகாரத்தில் உரிய அதிகாரி மீது நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது எனவும் கூறினார். அதேபோல, புத்தகங்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதற்கு காரணம் குறித்து பேசிய அவர், புத்தக தயாரிப்பில் ஈடுபட்ட கல்வியாளர்கள் விரைவாக செயல்படாததால் தாமதமானதாக குறிப்பிட்டார். அத்தனையும் அடுத்த கல்வியாண்டில் சரிசெய்வோம் என கூறினார்.

Related Stories: