இந்தியா முழுவதும் ஒரு பெரிய வெற்றியை அடைந்தாலும் தமிழகத்தில் பாஜ காலூன்ற முடியாமல் தடுத்த பெருமை திமுகவை சாரும்: மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் பொன் குமார் பேட்டி

சென்னை: “இந்தியா முழுவதும் ஒரு பெரிய வெற்றியை அடைந்தாலும், தமிழகத்தில் பாஜகவால் கால் ஊன்ற முடியாமல் தடுத்த பெருமை திமுகவை சாரும்” என்று பொன் குமார் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சியின் தலைவர் பொன்குமார் சந்தித்து பேசினார். அப்போது நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை தேடித்தந்ததற்காக மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். சந்திப்பின்போது பொது செயலாளர் மலர் ஆறுமுகம், பொருளாளர் என்.சுந்தர்ராஜ், இணை பொது செயலாளர் பி.கே.மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர். சந்திப்புக்கு பின்னர் பொன்குமார் அளித்த பேட்டி: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக அணி பெற்றுள்ள அபார வெற்றியானது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கடும் உழைப்பிற்கும் அவரது அரசியல் வியூகத்திற்கும் கிடைத்த வெற்றியாகும். மத்திய மோடி அரசின் தமிழக விரோத செயல்பாடுகளையும், மாநில எடப்பாடி அரசின் கையாலாகாத, மக்கள் விரோத செயல்பாடுகளையும் மு.க.ஸ்டாலின் மக்களிடம் கொண்டு சேர்த்த விதம் இந்த மகத்தான வெற்றிக்கு வித்திட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் திமுகவின் இக்கால தன் நிகரற்ற தலைவராக உயர்ந்துள்ளார்.

இந்தியா முழுவதும் பாஜக ஒரு பெரிய வெற்றியை அடைந்தாலும் தமிழகத்தில் பாஜகவால் கால் ஊன்ற முடியாமல் தடுத்த பெருமை திமுகவை சாரும். தமிழகத்தில் ஆளுங்கட்சியான அதிமுக தலைமையில் பாமக, தேமுதிக, பாஜக, தமாகா போன்ற கட்சிகள் சேர்ந்து மெகா கூட்டணி அமைத்து, மத்திய, மாநில அரசுகளை கையில் வைத்து கொண்டு, பணத்தை வாரி இறைத்தும் அந்த அணி வெற்றி பெற முடியாமல் படுத்தோல்வி அடைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல்களிலும், சட்டப்பேரவை இடைத்தேர்தல்களிலும் திமுகவிற்கு கிடைத்த வெற்றி என்பது மக்களால் வழங்கப்பட்டவையாகும். சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் அதிமுக பெற்றுள்ள சில வெற்றி என்பது விலை கொடுத்து வாங்கப்பட்டவையாகும். மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ள முதல்வர் எடப்பாடி அதற்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகிட முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: