மானிய கோரிக்கையின்போது அறநிலையத்துறையில் புதிய அறிவிப்புகள் என்ன?

சென்னை: அறநிலையத்துறை மீதான மானிய கோரிக்கையின்போது புதிய அறிவிப்புகள் தொடர்பாக கமிஷனர் பணீந்திர ரெட்டி அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தினார். இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 40,190 கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதான கோயில்கள் அடக்கம். இந்த கோயில்களில் சுற்றுச்சுவர், மண்டபம், அன்னதானம் கூடம் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை தவிர்த்து ஒவ்வொரு ஆண்டும் 1000 கோயில்களின் திருப்பணி மேற்கொள்வதும் போன்ற பணிகளும் நடந்து வருகிறது. இது தொடர்பாக, ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையில் நடைபெறும் அறநிலையத்துறை  மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அறிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது இந்தாண்டு அறநிலையத்துறை மானியக்கோரிக்கையின்போது என்ன மாதிரியான அறிவிப்புகள் தருவது என்பது தொடர்பாக கமிஷனர் பணீந்திர ரெட்டி தலைமையில் கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில், இந்தாண்டும் 1000 கோயில்களில் திருப்பணி மேற்கொள்வது, 3 ஆயிரம் கோயில்களில் பாதுகாப்பு அறைகள் கட்டுவது, சொத்துக்கள் உள்ள கோயில்களில் புதிதாக செயல் அலுவலர்கள் நியமிப்பது, மண்டல அளவில் புதிதாக கூடுதல் ஆணையர் பணியிடங்களை ஏற்படுத்துவது, திருக்கோயில் பாதுகாப்பு படைக்கு 2,500 பேரை புதிதாக நியமனம் செய்வதும், மேலும், 500 கோயில்களில் அன்னதானம் விரிவுப்படுத்துவது தொடர்பாக இந்தாண்டும் அறநிலையத்துறை அறிவிப்பில் கொண்டு வர இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அறநிலையத்துறை கமிஷனர் சார்பில் மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், பாதுகாப்பு கருதி எத்தனை கோயில்களில் புதிதாக சுற்றுச்சுவர் கட்டுவது, மண்டபம் கட்டுவது, அன்னதானம் கூடம் அமைப்பது, குடிநீர் சுத்திகரிப்பு கருவி பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பாக இந்த மாத இறுதியில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்பேரில் மண்டல இணை ஆணையர் கட்டுப்பாட்டில் கோயில் செயல் அலுவலர்களுக்கு இது தொடர்பான விவரங்களை சமர்பிக்க கடிதம் எழுதியுள்ளனர். மண்டல இணை ஆணையர்கள் வரைவு அறிக்கை பெற்று மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது அறிவிப்பில் வெளியிடுவது தொடர்பாக கமிஷனர் முடிவு செய்வார்’ என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: